செய்திகள்

மோசமான சாலையால் பரிதாபம்- ஆம்புலன்சில் கர்ப்பிணி பெண்ணுக்கு குழந்தை இறந்து பிறந்தது

Published On 2018-06-04 04:28 GMT   |   Update On 2018-06-04 04:28 GMT
மோசமான சாலையால் விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை பகுதியைச்சேர்ந்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்சிலேயே குழந்தை இறந்து பிறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கல்வராயன் மலை அருகில் உள்ள எழுதூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி துர்க்கையம்மாள் (வயது 26). நிறை மாத கர்ப்பிணி.

சம்பவத்தன்று அதிகாலையில் துர்க்கையம்மாள் பிரசவ வேதனையால் துடித்தார். உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதிகாலை 4 மணியளவில் துர்க்கையம்மாள் வீட்டுக்கு ஆம்புலன்ஸ் வந்தது.

அதில் அவரை ஏற்றி 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அந்த பகுதியில் சாலைகள் மிகவும் மோசமாக இருந்தன. இதனால் 60 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 6 மணி நேரம் ஆனது. இதனால் ஆம்புலன்சிலேயே குழந்தை இறந்தது.

காலை 10 மணியளவில் துர்க்கையம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் உடனடியாக ஆபரேசன் செய்தனர். அப்போது குழந்தை இறந்தே பிறந்தது. இதைக் கேட்டதும் சரவணனும் அவரது உறவினர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும் துர்க்கையம்மாளின் உடல் நிலையும் கவலைக்கிடமானது. அவருக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

துர்க்கையம்மாளின் கிராமத்தில் இருந்து 28 கி.மீ. தொலைவில் மாவடிபட்டு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. ஆனால் அங்கு அனுமதிக்காமல் ஆம்புலன்ஸ் டிரைவர் அவரை 60 கி.மீ. தொலைவில் உள்ள கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றார்.

இது தொடர்பாக துர்க்கையம்மாளின் உறவினர்கள் கூறும் போது, ஆஸ்பத்திரிக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக இருந்ததே குழந்தையின் உயிரை பலி வாங்கிவிட்டது என்று தெரிவித்தனர். #Tamilnews
Tags:    

Similar News