செய்திகள்

துவரங்குறிச்சி அருகே காட்டெருமை மீது சொகுசு பஸ் மோதி கவிழ்ந்தது: 10 பேர் காயம்

Published On 2018-06-01 18:13 IST   |   Update On 2018-06-01 18:13:00 IST
துவரங்குறிச்சி அருகே காட்டெருமை மீது சொகுசு பஸ் மோதி கவிழ்ந்தது. இதில் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

மணப்பாறை:

சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு தனியார் சொகுசு பஸ் ஒன்று 30 பயணிகளுடன் புறப்பட்டு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் துவரங்குறிச்சி வனத்துறை அலுவலகம் எதிரே சென்றது. அப்போது பெரியமலை வனப்பகுதியில் இருந்து வந்த காட்டெருமை திடீரென சாலையின் குறுக்கே பாய்ந்தது. அப்போது வேகமாக வந்த சொகுசு பஸ் அந்த காட்டெருமை மீது மோதியது.

இதனால் கட்டுப்பாட்டை இழந்த பஸ் தாறுமாறாக ஓடி சாலையோர பள்ளத்தில் உருண்டு கவிழ்ந்தது. பஸ்சுக்குள் இருந்த பயணிகள் அலறினர். இந்த விபத்தில் அதில் பயணம் செய்த சிட்லப்பாக்கத்தை சேர்ந்த பிச்சம்மாள் (வயது 80), சென்னையை சேர்ந்த மாருதிஜென் (34), நெல்லையை சேர்ந்த சத்தியதாஸ் (54), சரத்குமார் (22), பிரசாத் (28), உஷா (46), செல்லதுரை (40), சண்முகம் (64), அனிதா (28), போஸ் (44) ஆகிய 10 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

மேலும் விபத்தில் சிக்கிய காட்டெருமையும் சம்பவ இடத்திலேயே இறந்தது. இது குறித்த தகவல் அறிந்ததும் துவரங்குறிச்சி போலீசார் விரைந்து வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். காயம் அடைந்தவர்களை காப்பாற்றி திருச்சி, மணப்பாறை, துவரங்குறிச்சி அரசு ஆஸ்பத் திரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

துவரங்குறிச்சியை ஒட்டியுள்ள பெரியமலை வனப்பகுதியில் ஏராளமான காட்டெருமைகள் வசித்து வருகின்றன. இவை அவ்வப்போது தண்ணீர் தேடி வனத்தில் இருந்து நகர பகுதிக்கு வருவதும், இது போன்ற விபத்தில் சிக்கி பலியாவதும் அடிக்கடி நடந்து வருகிறது.

எனவே இதனை தடுக்க வனத்துறையினர் போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

Similar News