செய்திகள்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க நடவடிக்கை- மத்திய, மாநில அரசுகளுக்கு ராமதாஸ் வேண்டுகோள்

Published On 2018-06-01 02:26 GMT   |   Update On 2018-06-01 02:26 GMT
வரி குறைப்பு செய்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.#Ramadoss #petorl #diesel
சென்னை:

பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

பெட்ரோல், டீசல் விலை விண்ணைத் தொடும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், அதை சமாளிப்பதற்கான நடவடிக்கையாக பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரியை லிட்டருக்கு ரூ.1 குறைத்து கேரள அரசு ஆணையிட்டுள்ளது.

கேரளத்தில் குறைக்கப்பட்ட எரிபொருள் விலைகள் நாளை (இன்று) நடைமுறைக்கு வருகின்றன. இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மிகச்சரியான முடிவு ஆகும். கேரள அரசின் இந்த அறிவிப்பிலிருந்து மற்ற மாநில அரசுகள், குறிப்பாக தமிழக அரசு பாடம் கற்கவேண்டும்.

மாநில அரசு அதன் செலவுகளுக்காக மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீது அதிக வரி வசூலிப்பது வழிப்பறிக்கு இணையான செயல் ஆகும். தமிழகத்தில் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்ட விற்பனை வரியை குறைத்தாலே பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.4.31 குறையும்.



அதேபோல், டீசல் விலை ரூ.2.10 குறையும். இந்த விலைக்குறைப்பால் தமிழக அரசுக்கு பெட்ரோல், டீசல் விலை மூலம் கிடைக்கும் வருமானத்தில் பெரிய அளவில் எந்த இழப்பும் ஏற்படாது. அதேநேரத்தில் மக்களின் செலவு பெருமளவில் குறையும். இதனால் தொழில் உற்பத்தி அதிகரித்து மாநில அரசின் வருவாய் அதிகரிக்கும். மாறாக பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் தொடர்ந்து உயர்த்தப்பட்டால் அது தமிழகத்தின் முன்னேற்றத்தை கடுமையாக பாதிக்கும்.

மத்திய, மாநில அரசுகள் வரி குறைப்பு செய்வதன் மூலம் பெட்ரோல், டீசல் விலைகளை முறையே ரூ.70, ரூ.60-க் கும் கீழ் குறைக்க நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Ramadoss #petorl #diesel 
Tags:    

Similar News