செய்திகள்

தூத்துக்குடி போலீசாரை தாக்க கும்பல் திட்டம்?- உளவுத்துறை அறிக்கையால் பரபரப்பு

Published On 2018-05-30 04:22 GMT   |   Update On 2018-05-30 04:22 GMT
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றதற்காக பழிக்குப்பழி வாங்கும் விதமாக போலீசாரை தாக்க ஒரு கும்பல் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. #Thoothukudifiring
தூத்துக்குடி:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 22-ந் தேதி தூத்துக்குடியில் நடந்த போராட்டம் மோதலில் முடிந்தது. போராட்டக்காரர்கள் கல்வீச்சு- தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர். அவர்கள் ஒடுக்க போலீசார் தடியடி மற்றும் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.

இந்த சம்பவத்தையடுத்து தூத்துக்குடியில் பதற்றம் உருவானது. இதையடுத்து அங்கு 2 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டனர். 5 ஐ.ஜி.க்கள், 7 டி.ஐ.ஜி.க்கள் என ஏராளமான போலீஸ் அதிகாரிகளும் தூத்துக்குடியில் முகாமிட்டனர். இருந்த போதிலும் தூத்துக்குடியில் ஆங்காங்கே தீவைப்பு, பெட்ரோல் குண்டுவீச்சு சம்பவங்கள் தொடர்ந்தன.

இதனால் பக்கத்து மாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு சுமார் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கமாண்டோ வீரர்களும் வரவழைக்கப்பட்டனர். பலத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டதன் எதிரொலியாக தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப தொடங்கியது.

இதையடுத்து தூத்துக்குடியில் குவிக்கப்பட்டிருந்த போலீசாரின் எண்ணிக்கை படிப்படியாக குறைக்கப்பட்டது. வெளி மாவட்டங்களில் இருந்து வந்திருந்த போலீசார் அவர்களது ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.

நகரின் பல இடங்களில் போலீஸ் பாதுகாப்பு தளர்த்தப்பட்ட நிலையில் பதற்றமான பகுதியாக கருதப்படும் பாத்திமாநகர், திரேஸ்புரம், தாளமுத்துநகர், தெர்மல்நகர், முத்தையாபுரம் உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பில் ஈடுபடும் போலீசார், அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்கள் மற்றும் சமூக நலக்கூடங்களில் தங்கியுள்ளனர்.


இந்நிலையில் துப்பாக்கி சூடு நடத்தி 13 பேரை சுட்டுக் கொன்றதற்காக பழிக்குப்பழி வாங்கும் விதமாக போலீசாரை தாக்க ஒரு கும்பல் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அவர்கள் அதனை எச்சரிக்கையாக போலீஸ் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

தூத்துக்குடியில் கடந்த 22-ந்தேதி மோதல் நடந்த போது போலீஸ்காரர்களை, போராட்டக்காரர்கள் ஆவேசமாக கற்களை வீசி தாக்குல் நடத்தினர். துப்பாக்கி சூடு நடந்த பிறகும் போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கல்வீச்சு மற்றும் தீவைப்பு சம்பவத்தில் ஈடுபட்டனர்.

அதன் பிறகு ஆயிரக்கணக்கான போலீசார் தூத்துக் குடியில் குவிக்கப்பட்டு கலவரக்காரர்களை தடுத்ததால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. இருந்த போதிலும் போலீசார் கண் மூடித்தனமாக தடியடி நடத்தியது, துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதால் போராட்டக்காரர்கள் இன்னும் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

ஆகவே ஒரு கும்பல் போலீசாரை தாக்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. இதற்காக அந்த கும்பல் நெல்லை மாவட்டம் கூத்தங்குழி பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோரை கடல் வழியாக படகு மூலம் தூத்துக்குடிக்கு வரவழைத்து இருப்பதாகவும், வெடிகுண்டுகளை தயாரித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அவர்கள் மூலம் பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் தங்கியுள்ள திருமண மண்டபங்கள், சமூக நலக்கூடங்கள் மற்றும் சில போலீஸ் நிலையங்களை தாக்க திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. மேலும் அந்த கும்பலில் பல்வேறு தாக்குதல் திட்டங்கள் குறித்து தகவல் சேகரித்துள்ள உளவுத்துறை போலீசார், அதுபற்றி நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு அறிக்கை அளித்துள்ளனர்.

அதன்படி போலீசாரை தாக்க திட்டமிட்டுள்ள கும்பல் பற்றி ரகசிய விசாரணை மற்றும் கண்காணிப்பில் போலீஸ் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். மேலும் மர்மக்கும்பல் தாக்குதல் நடத்தக்கூடும் என எச்சரிக்கைப்பட்டுள்ள இடங்களில் போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். #Thoothukudifiring #SterliteProtest
Tags:    

Similar News