செய்திகள்

போலீசாரின் எண்ணிக்கையை குறைப்பது குறித்து ஆலோசனை: கலெக்டர் சந்தீப் நந்தூரி பேட்டி

Published On 2018-05-27 11:34 GMT   |   Update On 2018-05-27 11:34 GMT
தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் வெளி மாவட்ட போலீசாரை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம் என கலெக்டர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். #tuticorinfiring #sandeepnanduri

தூத்துக்குடி:

தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரி இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மற்ற பகுதிகளில் 95 சதவீதம் இயல்பு நிலை திரும்பியுள்ளது. மக்கள் அன்றாட பணிக்கு திரும்பியுள்ளனர். அத்யாவசிய பொருட்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.

வெளி மாவட்ட போலீசாரை குறைப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறோம். தற்போது 144 தடை உத்தரவு தேவை இல்லை என்பதால் நீட்டிக்கப்படவில்லை. சூழலை கண்காணித்து வருகிறோம்.

தேவைப்பட்டால் மீண்டும் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படும். துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேரில் 7 பேரின் உடல் பரிசோதனை முடிவடைந்துள்ளது. எஞ்சிய 6 பேரின் பிரேத பரிசோதனை நடக்க ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. ஸ்டெர்லைட் ஆலை இயங்க அனுமதிக்க மாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார்.

இதையடுத்து தண்ணீர் மற்றும் மின்சார வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இவை இல்லாமல் ஆலை இயங்க முடியாது. எனவே பொதுமக்கள் அரசின் உறுதியை ஏற்று முழுவதுமாக இயல்பு நிலை திரும்ப ஒத்துழைக்க வேண்டும்.

தற்போதைய சூழ்நிலையை அரசு கண்காணித்து வருகிறது. இணையதள சேவை வழங்குவது குறித்து அரசு முடிவெடுக்கும். துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்தவர்களில் 3 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார். #tuticorinfiring #sandeepnanduri 

Tags:    

Similar News