செய்திகள்

கோவை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு- ஆட்டோக்கள், வேன்கள் ஓடவில்லை

Published On 2018-05-25 11:29 GMT   |   Update On 2018-05-25 11:29 GMT
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து கோவை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. ஆட்டோக்கள், வேன்கள் இயக்கப்படவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கோவை:

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தை கண்டித்து தி.மு.க. உள்ளிட்ட எதிர்கட்சிகள் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கோவை மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு தமிழக வியாபாரிகள் சம்மேளனம் மற்றும் பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆதரவு தெரிவித்திருந்தனர்.

கோவை காந்திபுரம், சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், ஆர்.எஸ்.புரம், சாய்பாபா காலனி, மேட்டுப்பாளையம் ரோடு, சாய்பாபாகாலனி, கவுண்டம்பாளையம், சிவானந்தாகாலனி, 100 அடி ரோடு, உக்கடம் உள்ளிட்ட இடங்களில் மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் அடைக்கப்பட்டிருந்தன.

பெரியநாயக்கன்பாளையம், பேரூர், மேட்டுப்பாளையம், பொள்ளாச்சி, வால்பாறை, கருமத்தம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் புறநகர் பகுதிகளிலும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

பஸ் நிலையங்கள் மற்றும் ரெயில் நிலையங்கள் அருகே ஓட்டல்கள், மருந்தகங்கள், தள்ளுவண்டி கடைகள் மட்டும் திறந்திருந்தன. எம்.ஜி.ஆர். மார்க்கெட், அண்ணா மார்க்கெட், தியாகி குமரன் மார்க்கெட், உக்கடம் மார்க்கெட்டுகளில் கடைகள் திறந்திருந்தன.

முழுஅடைப்பு போராட்டத்துக்கு கோவை பம்பு உற்பத்தியாளர்கள் சங்கம், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் ஊரக தொழில் முனைவோர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்திருந்தன. இதனால் கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சிறு, குறு தொழிற்சாலைகளும் மூடப்பட்டிருந்தன.

முழுஅடைப்பு போராட்டம் காரணமாக பஸ் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்படவில்லை. காலை 8 மணி நிலவரப்பட்டி கோவை மாநகரில் 543 பஸ்களும், புறநகர் பகுதிகளில் 464 பஸ்களும் வழக்கம் போல ஓடின.

கோவையில் இருந்து பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் உள்ளிட்ட கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் பஸ்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன. கேரளாவில் இருந்தும் கோவைக்கு பஸ்கள் வந்தன. 100 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

போராட்டத்துக்கு அனைத்து ஆட்டோ சங்க கூட்டு கமிட்டி ஆதரவு தெரிவித்திருந்தன. கோவையில் இன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்படவில்லை என நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இதேபோல வேன்களும் இயக்கப்படவில்லை.#tamilnews
Tags:    

Similar News