மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆர்ப்பாட்டம்
மதுரை:
தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர்.
போலீசாரின் அராஜக செயலை கண்டித்து அரசியல் கட்சியினர், மாணவர் அமைப்பினர் போராட்டம், மறியல்கள் நடத்தி வருகின்றனர்.
மதுரை பழங்காநத்தத்தில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. புறநகர் மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.
செயற்குழு உறுப்பினர்கள் கனகராஜ், மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் வெங்கடேசன், மாநகர் மாவட்ட செயலாளர் விஜயராஜன் ஆகியோர் பேசினர்.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு காரணமான மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டை பதவி நீக்கம் செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான விசாரணைக்குழுவை ரத்து செய்து பணியில் உள்ள நீதிபதி தலைமையில் விசாரணைக்குழு அமைக்க வேண்டும். பலியானவர்களின் குடும்பங்களுக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும்.
இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.