செய்திகள்

890 அரசு பள்ளிகளை மூடும் எண்ணம் இல்லை - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

Published On 2018-05-23 11:14 IST   |   Update On 2018-05-23 11:14:00 IST
சுமார் 10 மாணவர்கள் கூட இல்லாத 890 அரசு பள்ளிகளை மூடுவதில் அரசுக்கு எண்ணம் இல்லை என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
சென்னை:

பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் சென்னை கோட்டையில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகளை வெளியிட்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த தேர்வு முடிவில் வெற்றி பெற்றுள்ள மாணவ- மாணவிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர்கள் தோல்வி ஏற்பட்டால் துவண்டு விடாமல் இருப்பதற்கு கவுன்சிலிங் பெற 14417 என்ற தொலைபேசியில் தொடர்பு கொண்டால் ஹெல்ப்லைன் மூலம் மன அழுத்தத்தை குறைக்க அறிவுரைகள் வழங்கப்படும்.

தோல்வி அடைந்த மாணவர்கள் ஜூன் மாதம் 28-ந்தேதி தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. எனவே இதில் தேர்வு எழுதி பிளஸ்-1 அல்லது ஐ.டி.ஐ. போன்ற நிறுவனங்களுக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்படும்.

மாணவர்களின் மதிப்பெண்களை எடுத்துக்காட்டி சில தனியார் பள்ளிகள் விளம்பரப்படுத்துவதாக தகவல் வந்துள்ளது. இனி இம்மாதிரி நடைபெறக் கூடாது என அவர்களின் கவனத்துக்கு சொல்லி உள்ளோம். மீண்டும் அந்த பள்ளிகள் விளம்பரப்படுத்தினால் அரசு நடவடிக்கை மேற்கொள்ளும்.

மதிப்பெண்களுக்கு பதில் ‘கிரேடு’ கொண்டு வரும் நடைமுறை இப்போதைக்கு இல்லை. பிளஸ்-2 எழுதும் மாணவர்களுக்கு 600 மதிப்பெண் என்ற முறையில் மொத்தமாக 1200 மதிப்பெண்கள் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இப்போது உள்ள நடைமுறை 1200 மதிப்பெண் என்பது பிளஸ்-1, பிளஸ்-2 மார்க்கை மொத்தமாக வைத்து பிளஸ்-2 எழுதும் போது 1200 மதிப்பெண் உள்ளது. இப்போது பிளஸ்-1 எழுதும்போது இதற்கு 600 மதிப்பெண். 3 மணி நேரம் தேர்வு எழுதுவதை மாற்றி 2.30 மணி நேரம் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது


அரசு பள்ளிகளை பொறுத்தவரையில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத தொடக்க பள்ளிகள் இருக்கிறது. இது மட்டுமல்ல நாங்கள் மொத்தமாக கணக்கெடுத்ததில் தமிழ்நாடு முழுவதும் 890 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாகவே உள்ளது. இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அரசு பள்ளிகளை மூடுகிற நிலை இல்லை.

இருந்தபோதிலும் அந்த பகுதியில் உள்ள பெற்றோர்கள், பொது மக்களின் கருத்தை கேட்ட பிறகு என்ன நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசு பரிசீலிக்குமே தவிர எந்த பள்ளியையும் மூடும் நிலை இந்த அரசுக்கு இல்லை.

அரசு பள்ளிகளில் கூடுதல் மாணவர்களை சேர்க்க ஆசிரியர்கள் கிராமம் கிராமமாக சென்று புதிய பாடத்திட்டங்களை எடுத்து சொல்லி விளக்கவும், விழிப்புணர்வு பணிகளும் மேற்கொண்டு செப்டம்பர் வரை மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தி உள்ளோம்.

புதிய பாடத்திட்டத்தை நாங்கள் வெளியிடும்போது ஒருசில பிழைகள் இருந்தது. அது சரி செய்யப்பட்டுள்ளது. ஜூன் 1-ந்தேதி புத்தகம் வழங்கும்போது எந்த பாடத் திட்டத்திலும் பிழைகள் இருக்காது.

2013-ல் தகுதி தேர்வு எழுதிய ஆசிரியர் 93 ஆயிரம் பேர் 2013, 2014, 2017 என்ற முறையில் ஆசிரியர்கள் தேர்வு எழுதி முடிவுகள் அறிவிக்கப்பட்டு தயாராக உள்ளனர்.

2013-2017ல் உள்ள வேறுபாடுகளை வெயிட்டேஜ் பற்றி பரிசீலித்து கொண்டு இருக்கிறது. இதுபற்றி அரசு மீண்டும் அவர்களுககு வாய்ப்பு அளிப்பது பற்றி மிக விரைவில் அரசு நல்ல முடிவு மேற்கொள்ளும்.

தனியார் சி.பி.எஸ்.இ, மெட்ரிக். என இரு பிரிவு உள்ளது. சி.பி.எஸ்.இ. மாணவர்கள் கடந்த ஆண்டு தகுதி தேர்வு எழுதி மருத்துவர்களாக சென்றது கூடுதலாக உள்ளது என்ற நோக்கத்தோடு மாணவர்கள் சென்றிருக்கலாம். இநத ஆண்டு இந்த நிலை இருக்காது.

நமது அரசு பள்ளிகளில் படித்து நீட் தேர்வை ஏறத்தாழ 10 ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதி உள்ளனர். குறைந்தது 1000 மாணவர்களாவது மருத்துவர் ஆக வாய்ப்பு உள்ளது. ஆகவே இனி எதிர் காலத்தில் சி.பி.எஸ்.இ.க்கு செல்லாமல் அரசு பள்ளிக்கு வருகிற நிலை அரசால் மாற்றி அமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News