செய்திகள்

துப்பாக்கிச்சூட்டில் பலியானவர்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோஹித் இரங்கல்

Published On 2018-05-22 14:03 GMT   |   Update On 2018-05-22 14:03 GMT
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 11 பேரின் குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாக தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் குறிப்பிட்டுள்ளார். #SterliteProtest #BanwarilalPurohit
சென்னை:

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி அப்பகுதி மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர். போராட்டம் இன்றுடன் 100 நாட்களை எட்டியுள்ள நிலையில், கலெக்டர் அலுவலகத்தை நோக்கி மக்கள் இன்று பேரணியாக சென்றனர். அப்போது, போலீசாருக்கும் அவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது, போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தும் போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் வெடித்தது. மோதல் கலவரமாக மாறிய சூழலில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்த வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டதுடன் தீக்கிரையாக்கப்பட்டது.

இதனை அடுத்து, போராட்டக்காரர்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில், 9 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளதாக அரசுத்தரப்பு மற்றும் அனைத்து ஊடகங்களும் தெரிவித்துள்ளன.  துப்பாக்கிச்சூட்டுக்கு பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். 

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்து உள்ளது. படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.3 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும், நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில்,  ‘தூத்துக்குடியில் 11 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் அதிர்ச்சி அடைந்தேன். அவர்களது குடும்பத்திற்கு என்னுடைய அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறேன். மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் அமைதியை கடைப்பிடிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News