செய்திகள்

திருவள்ளூரில் ஆடிட்டர்-மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன் நகை கொள்ளை

Published On 2018-05-22 07:36 GMT   |   Update On 2018-05-22 07:36 GMT
திருவள்ளூரில் ஆடிட்டர்-மனைவியை கட்டிப்போட்டு 200 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர், ராஜாஜி புரம் பத்மாவதி நகரில் வசித்து வருபவர் ராமச்சந்திரன், ஆடிட்டர். இவரது மனைவி ரஜிதா. இவர்களது மகன் லோகேஷ்.

நேற்று இரவு வீட்டை பூட்டிவிட்டு கீழ்தளத்தில் உள்ள அறையில் ராமச்சந்திரனும், அவரது மனைவி ரஜிதாவும் தூங்கினர். மேல் தளத்தில் உள்ள அறையில் லோகேஷ் இருந்தார்.

நள்ளிரவு ஒரு மணி அளவில் முகமூடி அணிந்த 5 பேர் கும்பல் திடீரென ராமச்சந்திரன் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து புகுந்தனர். சத்தம் கேட்டு எழுந்த ராமச்சந்திரனும், ரஜிதாவும் கொள்ளையர்கள் நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர்.

இதையடுத்து அவர்கள் 2 பேரையும் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் கொள்ளையர்கள் மிரட்டினர். கூச்சலிட்டால் வெட்டி கொன்று விடுவதாக மிரட்டினர்.

இதனால் பயந்து போன ராமச்சந்திரனும், ரஜிதாவும் அதிர்ச்சியில் உறைந்தனர். இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் துணியால் கட்டிப் போட்டனர்.

பின்னர் பீரோவில் இருந்த 200 பவுன் நகை, ரூ. 1 லட்சம் மதிப்பிலான தங்கத்தால் ஆன மூக்கு கண்ணாடி, 2 செல்போன்களையும் கொள்ளையடித்தனர். மேலும் வீட்டு முன்பு நிறுத்தி இருந்த ராமச்சந்திரனின் காரையும் திருடிவிட்டு முகமூடி கும்பல் தப்பி சென்று விட்டனர்.

கொள்ளை சம்பவம் நடந்து கொண்டு இருந்த போது மேல்தளத்தில் உள்ள அறையில் லோகேஷ் தூங்கிக் கொண்டு இருந்தார். அறைக் கதவு பூட்டப்பட்டு இருந்ததால் பெற்றோரின் அலறல் சத்தம் அவருக்கு கேட்கவில்லை.

நீண்ட நேரத்துக்கு பின்னர் லோகேஷ், சத்தம் கேட்டு எழுந்து கீழ்தளத்துக்கு வந்தார். அப்போது பெற்றோர் கட்டப்பட்டு கிடப்பதையும், வீட்டில் கொள்ளை நடந்து இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் பெற்றோரை மீட்டார்.


இது குறித்து திருவள்ளூர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. காஞ்சிபுரம் சரக டி.ஐ.ஜி. தேன்மொழி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபி.சக்கரவர்த்தி, துணை போலீஸ் சூப்பிரண்டு புகழேந்தி, இன்ஸ்பெக்டர் சர்தார் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

முகமூடி கும்பல் திருடிச் சென்ற காரின் பதிவு எண் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் போலீசர் உஷார் படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கொள்ளை நடந்த வீட்டில் கண்காணிப்பு கேமிரா இல்லை. அப்பகுதியில் உள்ள வேறு கண்காணிப்பு கேமிராக்களில் கொள்ளையர்கள் உருவம் பதிவாகி உள்ளதா? என்று ஆய்வு செய்து வருகின்றனர்.

ராமச்சந்திரன் வீட்டில் இருந்த 200 பவுன் நகைகளை சென்னையில் உள்ள தனியார் வங்கியின் லாக்கரில் வைத்து இருந்தார். கடந்த வாரம் வங்கியில் லாக்கர்கள் மாற்றி அமைக்கப்பட்டது.

இதையடுத்து அவர் நகைகளை வீட்டிற்கு கொண்டு வந்திருந்தார். இதனை அறிந்த கொள்ளை கும்பல் நகையை கொள்ளையடித்து சென்று இருக்கிறார்கள்.

கொள்ளை கும்பல் திட்டமிட்டு கைவரிசை காட்டி இருப்பது தெரியவந்துள்ளது. எனவே ராமச்சந்திரனின் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்ற நபர்கள் இதில் ஈடுபட்டார்களா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது. #tamilnews

Tags:    

Similar News