செய்திகள்

அவினாசி அருகே மகன் விபத்தில் பலியான அதிர்ச்சியில் பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2018-05-22 12:27 IST   |   Update On 2018-05-22 12:27:00 IST
அவினாசி அருகே விபத்தில் ஒரே மகனை பறிகொடுத்ததால் தாய் - தந்தை வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

அவினாசி:

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் அருகே உள்ள வெப்படை ஈகாட்டூர் எலந்த குட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல். விவசாயி. இவரது மகன் நிஷாந்த் (22). டிப்ளமோ கம்ப்யூட்டர் முடித்துள்ளார். இவரது நண்பர் கிருபாகரன் (20). ஊட்டி பைக்காரா மின்வாரிய குடியிருப்பை சேர்ந்தவர்.

நிஷாந்தும், கிருபாகரனும் நேற்று மோட்டார் சைக்கிளில் கோவை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு வந்தனர். இங்கு வேலை முடிந்து அவர்கள் ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர்.

அவினாசி அருகே உள்ள நாதம்பாளையம் பைபாஸ் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ரோடு ஓரம் சரக்கு ஆட்டோ நின்று கொண்டிருந்தது.

திடீரென மோட்டார் சைக்கிள், சரக்கு ஆட்டோ மீது மோதியது. இதில் நிஷாந்த், கிருபாகரன் ஆகியோர் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் இறந்தனர்.

நிஷாந்த் பெற்றோருக்கு ஒரே மகன் ஆவார். அவர் பலியான தகவல் கிடைத்ததும் அவரது தந்தை சக்தி வேல், தாய் சுதா ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.

அவர்கள் சோகத்துடன் தனது மகன் உடல் வைக்கப்பட்டுள்ள அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர். மகனின் உடலை பார்த்து கதறி அழுதனர். மனமுடைந்து காணப்பட்ட அவர்கள் குளிர்பானத்தில் வி‌ஷம் கலந்து குடித்தனர்.

இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். அவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி சக்திவேல், சுதா ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

இது குறித்து அவினாசி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விபத்தில் மகனை பறி கொடுத்த பெற்றோர் வி‌ஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews

Tags:    

Similar News