செய்திகள்

3 பாடங்களில் தோல்வி: பிளஸ்-1 மாணவி மறுதேர்வு எழுத ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-05-22 03:53 GMT   |   Update On 2018-05-22 03:53 GMT
வைரஸ் காய்ச்சலால் பிளஸ்-1 தேர்வில் 3 பாடங்களில் தோல்வியடைந்த சென்னை மாணவியை மறுதேர்வு எழுத ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
சென்னை:

சென்னை கே.கே.நகரில் உள்ள பத்மசேஷாத்ரி பாலபவன் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பிளஸ்-1 படித்த ஷாரோன் நிவேதிதா என்பவரின் தந்தை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ‘எனது மகள் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் பிளஸ்-1 தேர்வில் இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்களில் தோல்வியடைந்துவிட்டார். எனவே தோல்வியடைந்த பாடங்களில் மீண்டும் தேர்வு எழுத எனது மகளை அனுமதிப்பதுடன், அதே பள்ளியில் பிளஸ்-2 படிப்பை தொடரவும் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். பள்ளி நிர்வாகம் தரப்பில், ‘சி.பி.எஸ்.இ. விதிமுறைகளின்படி 2 பாடங்களில் தோல்வி அடைந்தால் மட்டுமே மறுதேர்வு எழுத முடியும்’ என்றும், ‘காய்ச்சலால் தான் தோல்வியடைய நேரிட்டது’ என்று மாணவி தரப்பிலும் வாதிடப்பட்டது. நீதிபதி எஸ்.வைத்தியநாதன், ‘வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் அந்த மாணவி தோல்வியடைந்த பாடங்களுக்கு நடைபெறும் மறுதேர்வுகளில் எழுத அனுமதிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டார். #tamilnews
Tags:    

Similar News