செய்திகள்

கடலூரில், அ.தி.மு.க. பிரமுகர் கொலை சம்பவம்: 4-வது நாளாக வெறிச்சோடி கிடக்கும் தேவனாம்பட்டினம் கிராமம்

Published On 2018-05-19 17:33 GMT   |   Update On 2018-05-19 17:33 GMT
கடலூரில், அ.தி.மு.க. பிரமுகர் கொலை சம்பவத்தால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால், தேவனாம்பட்டினம் மீனவ கிராமம் நேற்று 4-வது நாளாக வெறிச்சோடி கிடந்தது.
கடலூர்:

கடலில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்தது தொடர்பாக கடலூர் முதுநகர் சோனாங்குப்பம் மீனவர்களுக்கும், தேவனாம்பட்டினம் மீனவர்களுக்கும் இடையே கடந்த 15-ந்தேதி மோதல் ஏற்பட்டது.

இதில் ஆத்திரம் அடைந்த தேவனாம்பட்டினம் மீனவர்கள் அரிவாள், கத்தி, சுளுக்கி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் சோனாங்குப்பம் கிராமத்துக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதில், சோனாங்குப்பத்தைச்சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை செய்யப்பட்டார். மேலும் 3 பேர் காயம் அடைந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து இரு மீனவ கிராமங்களிலும் பதற்றம் நீடித்து வருகிறது. அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் கொலை தொடர்பாக கடலூர் துறைமுகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவனாம்பட்டினத்தைச்சேர்ந்த 8 மீனவர்களை கைது செய்தனர். மேலும் பலரை தேடி வருகிறார்கள்.

அதேபோல் சம்பவத்தன்று சோனாங்குப்பத்துக்கு ஆயுதங்களுடன் சென்ற மீனவர்களை தடுக்க முயன்ற தேவனாம்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயன்றதாக 5 பேரை தேவனாம்பட்டினம் போலீசார் கைது செய்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் உத்தரவின் பேரில் சோனாங்குப்பம் மற்றும் தேவனாம்பட்டினம் மீனவ கிராமங்களில் உள்ளூர் மட்டுமின்றி விழுப்புரம், திருவள்ளூர், காஞ்சீபுரம், திருவண்ணாமலை போன்ற வெளிமாவட்டங்களில் இருந்தும் போலீசார் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மேலும் கடலிலும் 4 படகுகளில் போலீசார் ரோந்து சுற்றி வருகிறார்கள்.

இந்த சம்பவங்களில் தொடர்புடைய மேலும் சிலரை கைது செய்வதற்காக 5 இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படையினரும் குற்றவாளிகளை தேடி வருகிறார்கள். இது தவிர தேவனாம்பட்டினம், துறைமுகம் ஆகிய போலீஸ் நிலையங்களுக்கு கூடுதலாக 16 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களும் குற்றவாளிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே போலீசாருக்கு பயந்து தேவனாம்பட்டினம் மீனவர்கள் கடந்த 15-ந்தேதி இரவில் இருந்தே ஊரை விட்டு வெளியே சென்று தலைமறைவாக இருக்கின்றனர். ஆண்கள் வெளியூர்களில் தலைமறைவாக இருப்பதால் தேவனாம்பட்டினம் மீனவ கிராமத்தில் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மட்டுமே உள்ளனர்.

அவர்களும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருப்பதால், தேவனாம்பட்டினம் மீனவ கிராமம் நேற்று 4-வது நாளாக வெறிச்சோடி கிடந்தது. சோனாங்குப்பம் மீனவ கிராமத்தில் மக்கள் நடமாட்டம் இருந்தாலும், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கும் ஒரு வித இறுக்கமான சூழல் நிலவுகிறது.

இந்த நிலையில் கடந்த 15-ந்தேதி சோனாங்குப்பத்தில் தாக்குதலில் ஈடுபட்ட மீனவர்கள் பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்வதற்காக தேவனாம்பட்டினம் மீனவர்களின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. 
Tags:    

Similar News