செய்திகள்

மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காவிரி மீட்பு குழுவினர் கைது

Published On 2018-05-17 17:54 IST   |   Update On 2018-05-17 17:54:00 IST
மத்திய அரசின் காவிரி செயல் திட்டத்தை கண்டித்து புதுவையில் உள்ள மத்திய அரசு அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற காவிரி மீட்பு குழுவினர் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி:

புதுவை காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் தமிழ்நாடு, புதுவைக்கு துரோகம் செய்யும் மத்திய அரசின் காவிரி செயல் திட்டத்தை கண்டித்தும், கர்நாடகத்தின் அணைகளை திறந்து மூடும் அமைப்பை உருவாக்க கோரியும், காவிரி தீர்ப்பாயத்தின் வழிகாட்டுதலின்படி அதிகாரம் உள்ள அமைப்பை சட்டப்படி உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசின் ஆவண காப்பகத்தை முற்றுகையிட போவதாக அறிவித்து இருந்தனர்.

அதன்படி போராட்டம் நடத்த ஜீவானந்தபுரத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டனர். இந்த ஊர்வலத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் மணிபாரதி முன்னிலை வகித்தார்.

ஊர்வலம் ஆவண காப்பகம் அருகே சென்ற போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆனால், தடுப்பை மீறி போராட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றபோது அவர்களை போலீசார் கைது செய்தனர். மொத்தம் 18 பேர் கைது செய்யப்பட்டனர்.
Tags:    

Similar News