செய்திகள்

மீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே உள்ள ரெயில்வே கேட் இன்று முதல் மூடல்

Published On 2018-05-16 04:30 GMT   |   Update On 2018-05-16 04:30 GMT
சுரங்கப்பாதை அமைக்கப்பட இருப்பதால், மீனம்பாக்கம்-பழவந்தாங்கல் இடையே உள்ள ரெயில்வே கேட் இன்று முதல் மூடப்படுகிறது.
ஆலந்தூர்:

சென்னையில் ரெயில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமால் இருக்க ரெயில்வே கேட் மூடப்பட்டு சுரங்கப்பாதை, மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் இடையே உள்ள ரெயில்வே கேட் இன்று (புதன்கிழமை) முதல் மூடப்படுகிறது.

இதுபற்றிய அறிவிப்பை காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையா வெளியிட்டு உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

பழவந்தாங்கல்-மீனம்பாக்கம் இடையே ஜி.எஸ்.டி. சாலையையும், பழவந்தாங்கல் பகுதியையும் இணைக்கும் ரெயில்வே கேட் 16-ந் தேதி (அதாவது இன்று) முதல் மூடப்படுகிறது. அதன்பிறகு சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும்.

எனவே இந்த வழியாக செல்லும் பொதுமக்கள், பழவந்தாங்கல் மற்றும் மீனம்பாக்கம் சுரங்கப்பாதைகளை பயன்படுத்திக்கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரெயில்வே கேட் மூடப்படுவதால், தண்டவாள பகுதியில் ரெயில்வே நிர்வாகம் ரூ.3 கோடியே 40 லட்சம் செலவில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகளை தொடங்க உள்ளது. இந்த பணிகள் முடிந்தபிறகு, சென்னை மாநகராட்சியிடம், ரெயில்வே நிர்வாகம் ஒப்படைக்கும். அதன்பின்னர் சுரங்கப்பாதைகளை சாலைகளுடன் இணைக்கும் பணிகளை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த பணிகளை ஒப்பந்த காலத்துக்குள் செய்து முடிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். #tamilnews
Tags:    

Similar News