செய்திகள்

வடசேரி அருகே வீட்டின் பூட்டை உடைத்து பொருட்கள் கொள்ளை

Published On 2018-05-14 17:44 IST   |   Update On 2018-05-14 17:44:00 IST
வடசேரி அருகே வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

நாகர்கோவில்:

வடசேரியை அடுத்த ஆலம்பாறை கிரேஸ் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால கிருஷ்ணன் (வயது 37).

இவரது மனைவி பிரசவத்திற்காக கடந்த சில நாட்களுக்கு முன் தாயார் வீட்டிற்கு சென்று இருந்தார். மனைவியை பார்ப்பதற்காக ராஜகோபால கிருஷ்ணனும் வீட்டை பூட்டிவிட்டு அங்கு சென்றார். வீட்டில் யாரும் இல்லை.

இந்த நிலையில் நேற்று காலை வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் முன் பக்க கதவு உடைக்கப்பட்டு வீடு திறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து வடசேரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு சப்-இன்ஸ்பெக்டர் அனில்குமார், சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் சங்கரகுமார் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர்.

வீட்டினுள் சென்று பார்க்கும்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த பொருட்களும் சிதறிக் கிடந்தது. மேலும் வீட்டில் இருந்த வெள்ளி விளக்கு ஒன்று, தம்ளர்-1, கப்பு-4 மற்றும் விலை உயர்ந்த காமிரா-1, டி.வி.டி. பிளேயர்-1, வாட்ச்-1 ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்று இருப்பது தெரியவந்தது.

மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கு வந்தனர். அவர்கள் பூட்டு உடைக்கப்பட்ட இடம், பீரோ ஆகிய இடங்களில் கொள்ளையர்களின் கைரேகைகளை பதிவு செய்தனர். இதில் கொள்ளையரின் கைரேகை சிக்கியது.

இந்த கைரேகைகளை கொண்டு போலீசார் பழைய கொள்ளையர்களின் கைரேகைகளுடன் ஒப்பிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவம் குறித்து வடசேரி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆள் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதால், உள்ளூர் கொள்ளையர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருப்பார்களா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News