சத்துவாச்சாரி புதுவசூரில் வடமாநில வாலிபர் மீது தாக்குதல் - வாலிபர் கைது
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் குழந்தை கடத்தல் பீதியில் வடமாநிலத்தவர்கள் மற்றும் மனநலம் பாதித்தவர்கள் என அப்பாவிகள் தாக்கப்படுவது தொடர்கிறது. சில நாட்கள் முன்பு செய்யாறில் திருட்டு பீதியில் கல்லூரி மாணவன், குழந்தை கடத்தல் பீதியில் குடியாத்தத்தில் வடமாநில வாலிபர் மற்றும் போளூர் அருகே சென்னை மூதாட்டி அடித்து கொலை செய்யப்பட்டனர்.
பெரும் அதிர்வலைகளை இச்சம்பவங்கள் ஏற்படுத்தியது. இதையடுத்து, குழந்தை கடத்தல் வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.பி. பகலவன் எச்சரித்துள்ளார். இந்த நிலையில், வடமாநில வாலிபர் ஒருவர் மீண்டும் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதுகுறித்த விபரம்:-
சத்துவாச்சாரி அடுத்த புதுவசூர் கிராமத்தில் நேற்று நள்ளிரவு வடமாநிலத்தை சேர்ந்த ஒரு வாலிபர் சுற்றித் திரிந்துள்ளார். சந்தேகம் ஏற்பட்ட அப்பகுதி மக்கள், அந்த வாலிபரை பிடித்து கொடூரமாக தாக்கினர். இதில் அவர் படுகாயமடைந்தார்.
தகவலறிந்ததும், சத்துவாச்சாரி போலீசார் விரைந்து வந்து வடமாநில வாலிபரை மீட்டு வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
விசாரணையில் அவர், மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த பிரசாத் சட்டர்ஜி (வயது 30) என்பது தெரிய வந்தது. அவரை தாக்கிய புகாரில், புதுவசூரை சேர்ந்த பார்த்திபன் (38) என்பவரை கைது செய்தனர்.