செய்திகள்

ஏற்காட்டில் கோடை விழா-மலர் கண்காட்சியை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்

Published On 2018-05-12 10:26 GMT   |   Update On 2018-05-12 10:26 GMT
ஏற்காட்டில் கோடை விழா, மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். #TNCM #EdappadiPalanisamy
சேலம்:

சேலம் மாவட்டம் ஏற்காட்டில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் மே மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு 43-வது கோடை விழா - மலர் கண்காட்சி இன்று (சனிக்கிழமை) காலை தொடங்கி வருகிற 16-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

ஏற்காடு கோடை விழா மற்றும் ஏற்காடு அண்ணா பூங்காவில் தோட்டக்கலைத் துறை மூலம் 2½ லட்சம் மலர்களை கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ள மலர் கண்காட்சி மற்றும் காய்கறி கண்காட்சி, பழக்கண்காட்சியையும் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.

பின்னர் ஏற்காடு கலையரங்கில் நடந்த விழாவில் ரூ.17.5 கோடி மதிப்பீட்டில் 29 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.4.5 கோடியில் முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தும், ரூ.5.12 கோடியில் 2,170 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கியும் சிறப்புரை ஆற்றினார்.

முன்னதாக, ஏற்காடு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மறைந்த முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 70-வது பிறந்தநாள் நினைவு வளைவு அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

சுற்றுலா துறை, கலை பண்பாட்டு துறை சார்பில் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் இன்னிசை நிகழ்ச்சிகளும் காலை 11 மணி முதல் இரவு 7 மணி வரை நடக்கிறது.

கால்நடை பராமரிப்பு துறை சார்பில் செல்லப்பிராணிகள் கண்காட்சி, சுற்றுலா துறை சார்பில் சுற்றுலா பயணிகள், பத்திரிகையாளர்களுக்கு படகு போட்டிகள் உள்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகிறது.

ஏற்காடு பகுதியில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் முற்றிலும் தடை செய்யப்பட்டு உள்ளதால் பிளாஸ்டிக் அல்லாத ஏற்காடு கோடை விழாவாக கொண்டாட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

மேலும், கோடை விழாவுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சியையொட்டி ஏற்காட்டில் இன்று காலை முதலே அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், சேர்வாராயன் கோவில், பக்கோடா பயிண்ட், மான் பூங்கா உள்பட பல பகுதிகளிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்திருந்தனர்.

ஏற்காட்டியில் லேசான குளிருடன் ரம்மியமான சூழல் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் இந்தாண்டு கோடை விழா முன் கூட்டியே தொடங்கி உள்ளதால் மேலும் சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.

சுற்றுலா பயணிகள் எளிதாக சென்று வரும் வகையில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் தலைமையில் 1500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், துரைக்கண்ணு, வெல்லமண்டி நடராஜன், கலெக்டர் ரோகிணி, சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாச்சலம் எம்.எல்.ஏ., மாநில தலைமை கூட்டுறவு வங்கி தலைவர் இளங்கோவன், ஏற்காடு தொகுதி எம்.எல்.ஏ. சித்ரா, மற்றும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். #TNCM #EdappadiPalanisamy
Tags:    

Similar News