செய்திகள்

என்னை டாக்டராக பார்க்க ஆசைப்பட்ட தந்தையை இழந்து விட்டேன்- மகள் கண்ணீர் பேட்டி

Published On 2018-05-08 12:09 IST   |   Update On 2018-05-08 12:09:00 IST
என்னை டாக்டராக பார்க்க ஆசைப்பட்ட எனது தந்தையை இழந்து விட்டேன் என நீட் தேர்வு எழுதிய மாணவி சுவாதி கண்ணீர் மல்க கூறியுள்ளார். #NeetExam

தந்தை சீனிவாசன் இறந்தது குறித்து மாணவி சுவாதி கண்ணீர் மல்க கூறியதாவது:-

நான் நீட் தேர்வு எழுத கல்லூரிக்குள் சென்றபோது எனது தந்தை மற்றும் குடும்பத்தினர் கல்லூரி வளாகத்தில் உள்ள மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தனர். ஆனால் அவர்களை அங்கே அமரக்கூடாது என்று கூறி கட்டாயப்படுத்தி வெளியேற்றி உள்ளனர். இதனால் அவர்கள் வெளியே சென்றுள்ளனர்.

பகல் 12 மணி அளவிலேயே எனது தந்தைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. ஆனால் அதை தாங்கிக்கொண்டு தேர்வு முடியும் வரை காத்திருந்தார். தேர்வு எழுதி விட்டு நான் வெளியே வந்த பிறகு தான் விவரத்தை தெரிவித்தார். உடனே ஆட்டோவில் அவரை அழைத்துச் சென்று அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். ஆனால் அவர் இறந்து விட்டார்.

 


 

எங்கள் சொந்த மாவட்டத்திலேயே நீட் தேர்வு எழுதுவதற்கு தேர்வு மையத்தை ஒதுக்கீடு செய்து இருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டு இருக்காது. நாங்கள் இங்கு வந்திருக்க வேண்டி அவசியம் இருந்து இருக்காது.

எனது தந்தையும் இறந்து இருக்கமாட்டார். எனக்காக வந்து இருந்த அவருக்கு இந்த கதி ஏற்பட்டது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. என்னை டாக்டராக பார்க்க ஆசைப் பட்ட எனது தந்தையை இழந்துவிட்டேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மகள் சுவாதியை அழைத்து வந்தது குறித்து சீனிவாசனின் மனைவி அமுதா கூறியதாவது:-

எங்களது மகள் சுவாதிக்கு நீட் தேர்வு எழுதுவதற்காக புதுச்சேரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதற்காக நான் என் கணவர் மற்றும் மகளுடன் வந்து இருந்தேன். மகள் சுவாதியை தேர்வு மையத்துக்குள் அனுப்பி விட்டு நானும், எனது கணவரும் அங்குள்ள மரத்தடியில் இருந்தோம். அப்போது அங்கு வந்த கல்லூரி நிர்வாகத்தினர் எங்களை வெளியேற்றினர். இதனால் வேறுவழியின்றி ரோட்டின் ஓரத்தில் இருந்தபடி காத்து இருந்தோம். அப்போது திடீரென எனது கணவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இருப்பினும் மகள் தேர்வு எழுதிவிட்டு வரும் வரை காத்திருந்தோம்.

பின்னர் மகள் சுவாதி வந்தவுடன், அவளிடம் விவரத்தை கூறினோம். பின்னர் எனது கணவரை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றோம். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் சீனிவாசன் இறந்தார். இதை எங்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

இவ்வாறு கதறியழுதபடி அவர் தெரிவித்தார்.#NeetExam

Similar News