செய்திகள்

கூட்டுறவு சங்கங்களுக்கான 3-ம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்தது

Published On 2018-04-28 05:26 IST   |   Update On 2018-04-28 05:26:00 IST
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து கூட்டுறவு சங்கங்களுக்கான 3-ம் கட்ட தேர்தல் தமிழகம் முழுவதும் நடந்தது.
சென்னை:

கூட்டுறவு சங்கங்களுக்கான தேர்தல் கடந்த 2013-ம் ஆண்டு நடந்தது. தேர்வு செய்யப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்களின் 5 ஆண்டு பதவிக்காலம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து புதிதாக நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்ய கூட்டுறவு தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது.

கூட்டுறவுத்துறை, பால் உற்பத்தி மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத்துறை, மீன் வளத்துறை, கைத்தறி மற்றும் துணிநூல் துறை, கூட்டுறவு வீட்டுவசதித் துறை, பனைப்பொருள் வளர்ச்சி வாரியம், கதர் கிராம தொழில் வாரியம், தொழில் மற்றும் தொழில் வணிகத்துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறை, வேளாண்மைத்துறை, சமூக நலத்துறை, ஊரக வளர்ச்சி பஞ்சாயத்துராஜ் துறை, பட்டு வளர்ச்சித்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்துறை, சர்க்கரைத்துறை ஆகிய 15 அரசு துறைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 4 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான கால அட்டவணை மார்ச் மாதம் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து மார்ச் 26-ந் தேதி முதற்கட்டமாக வேட்புமனு தாக்கல் தொடங்கியது. கடந்த 2-ந் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்தது. இதன்பின்னர், கடந்த 7-ந் தேதி 2-ம் கட்ட தேர்தல் நடந்தது. 3-ம் கட்ட தேர்தலுக்கு 9-ந் தேதி வேட்பு மனு தாக்கல் முடிவடைந்தது. 16-ந் தேதி தேர்தல் நடத்தப்படவேண்டும்.

இந்தநிலையில் கூட்டுறவு சங்க தேர்தலை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு கிளை கூட்டுறவு சங்க தேர்தலுக்கு தடை விதித்தது.



இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு உத்தரவுக்கு தடை விதித்து கூட்டுறவு சங்க தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. அதேவேளையில் தேர்தல் முடிவுகளை வெளியிடுவதற்கு தடை விதித்தது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து 3-ம் கட்ட கூட்டுறவு சங்க தேர்தல் நேற்று நடந்தது. அதன்படி, காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. வாக்குப்பதிவு தொடங்கியதும் கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர்கள் ஆர்வத்தோடு வந்து வாக்களித்தனர். சென்னை நந்தனத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் உள்பட பல்வேறு இடங்களில் நீண்ட வரிசையில் நின்று வாக்குகளை பதிவு செய்தனர். வாக்குப்பதிவின்போது ஒரு சில இடங்களில் சலசலப்பு ஏற்பட்டது.

மாலை 5 மணி வரையிலும் வாக்குப்பதிவு நடந்தது. வாக்குப்பதிவு முடிந்ததும் பலத்த பாதுகாப்புடன் தேர்தல் அதிகாரிகள் வாக்குப்பெட்டிகளை பூட்டி ‘சீல்’ வைத்தனர். பின்னர் அந்த வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் மாவட்ட தலைமை அலுவலகங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்ட பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  #CooperativeUnionElection

Similar News