பெருந்துறை அருகே மகனுடன் ஸ்கூட்டரில் சென்ற தாய் விபத்தில் பலி
பெருந்துறை:
பெருந்துறை அருகே உள்ள கள்ளியம் புதூரை சேர்ந்தவர் பாக்கியலட்சுமி (வயது 52). இவரது மகன் பிரகாஷ். பிரகாஷ் ஈரோட்டில் ‘‘கார் டெக்கரேஷன்’’ நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று ஒரு திருமணத்துக்காக பிரகாஷ் தனது தாயாரை அழைத்து கொண்டு ஸ்கூட்டரில் சின்னத்தாள் கோவில் திருமண மண்டபத்தில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்டு வீட்டுக்கு செல்ல மீண்டும் ஸ்கூட்டரில் புறப்பட்டனர்.
கள்ளியம்புதூர் பைபாஸ் ரோட்டில் வந்த போது பின்னால் வந்த ஒரு கார் எதிர் பாராதவிதமாக ஸ்கூட்டர் மீது பலமாக மோதியது.
மோதிய வேகத்தில் ஸ்கூட்டரை 100 அடி தூரம் இழுத்து சென்று ரோட்டோர பள்ளத்தில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
இந்த விபத்தில் பாக்கியலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவரது மகன் பிரகாஷ் படுகாயத்துடன் துடித்தார். அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. மனைவி பெயர் அருள் செல்வி.
விபத்தில் பலியான பாக்கியலட்சுமி உடல் பெருந்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீஸ் இன்ஸ் பெக்டர் சுகவனம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
விபத்தை ஏற்படுத்திய கார் நிற்காமல் சென்று விட்டது. அந்த காரை போலீசார் தேடி வருகிறார்கள். விபத்து நடந்த பகுதியிலும் மேலும் பைபாஸ் ரோட்டில் உள்ள காஞ்சிக்கோவில் ரோடு, பெத்தாம்பாளையம் பைபாஸ் ரோடு, துடுப்பதி பைபாஸ் ரோடு ஆகிய பகுதிகளில் மொத்தம் 3 மேம்பாலங்கள் அமைத்தால் விபத்துகள் அடியோடு தடுத்து நிறுத்தப்படும்.
இதனால் இந்த இடங்களில் உடனடியாக மேம்பாலங்கள் அமைத்து உயிர் பலியை தடுக்க வேண்டும் என முன்னாள் அமைச்சரும் பெருந்துறை தொகுதி எம்.எல்.ஏ.வுமான தோப்பு வெங்கடாச்சலம் மத்திய அரசை கேட்டு கொண்டுள்ளார். திருப்பூர் சத்யபாமா எம்.பி.யும் வலியுறுத்தி உள்ளார்.
மேலும் அந்த பகுதி பொதுமக்களும் கடந்த 5 ஆண்டுகளாக மேம்பாலம் கட்ட கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. இந்த பைபாஸ் ரோடுகளில் மட்டும் இதுவரை 250 பேர் விபத்துகளில் பலியாகி உள்ளனர். மேலும் 1800 பேர் விபத்தில் படுகாயம் அடைந்துள்ளனர்.
ஆகவே இனியும் காலம் தாழ்த்தாமல் பெருந்துறை பகுதியில் உள்ள பைபாஸ் ரோடுகளில் உடனடியாக மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கேட்டு கொண்டுள்ளனர்.