செய்திகள்

நடத்தையில் சந்தேகம்- மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது

Published On 2018-04-23 11:32 GMT   |   Update On 2018-04-23 11:32 GMT
ஈரோட்டில் நடத்தை சந்தேகத்தால் மனைவியை கத்தியால் குத்திக் கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.

ஈரோடு:

ஈரோடு ஆசிரியர்காலனி அவ்வையார் வீதியை சேர்ந்தவர் விவேகானந்தன். இவர் பிரபல கொசுவர்த்தி நிறுவனத்தில் பிரதிநிதியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி தீபரஞ்சினி (வயது 25). ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் வேலை செய்து வந்தார். இவர்களுக்கு 3½ வயதில் கனிஷ்கா என்ற மகள் உள்ளாள்.

விவேகானந்தனும், தீபரஞ்சினியும் கல்லூரியில் படிக்கும்போது காதலித்தனர். அவர்களுடைய காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களது எதிர்ப்பையும் மீறி விவேகானந்தனும், தீபரஞ்சினியும் திருமணம் செய்து கொண்டனர். ஆசிரியர் காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் வசித்தனர்.

கடந்த சில மாதங்களாக தீபரஞ்சினியின் நடத்தையில் விவேகானந்தனுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் தீபரஞ்சினி வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார். அப்போதும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. தீபரஞ்சினியை விவேகானந்தன் தாக்கினார். இதனால் மாடியில் இருந்து தீபரஞ்சினி இறங்கி கீழே வந்தார்.

வீட்டிற்கு வெளியே வீதிக்கு வந்த தீபரஞ்சினியை விவேகானந்தன் தலை, மார்பு, முதுகு உள்ளிட்ட 11 இடங்களில் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே தீபரஞ்சினி சரிந்து விழுந்தார்.

அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்தனர். அவர்கள் தீபரஞ்சினியை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே தீபரஞ்சினி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தீபரஞ்சினியை கொலை செய்துவிட்டு தப்பி ஓடிய விவேகானந்தனை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Tags:    

Similar News