செய்திகள்

கோடை வெயில் எதிரொலி: ஈரோடு மாவட்டத்தில் முட்டை விலை கடும் வீழ்ச்சி

Published On 2018-04-18 10:30 GMT   |   Update On 2018-04-18 10:30 GMT
ஈரோடு மாவட்டத்தில் முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் முட்டை கோழி பண்ணை உரிமையாளர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

ஈரோடு:

ஈரோடு மாவட்டத்தில் வெயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. காலை 10 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 6 மணி வரை உள்ளது. இதனால் குழந்தைகள், பெரியவர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்குள்ளாகிறார்கள்.

கடும் வெயில் காரணமாக முட்டை விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் 300 முட்டைக் கோழி பண்ணைகள் உள்ளன. வாரந்தோறும் திங்கள், வியாழன், சனிக்கிழமை ஆகிய நாள்களில் நாமக்கலில் உள்ள தேசிய முட்டை விலை ஒருங்கிணைப்புக் குழு மூலம் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

கடந்த பிப்ரவரி மாதம் வரலாறு காணாத அளவாக முட்டை விலை ரூ.5.16 ஆகி விலை உயர்ந்து காணப்பட்டது. பின்னர் படிபடியாக விலை குறைந்து கடந்த வாரம் ரூ.3.50 ஆகவும், திங்கட்கிழமை 10 காசு அதிகரித்து ரூ.3.60 ஆக விலை இருந்தது.

முட்டை விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் கட்டுபடியான விலை கிடைக்கவில்லை என முட்டை கோழி பண்ணை உரிமையாளர்கள் வேதனை தெரிவித்தனர்.

இது குறித்து முட்டை கோழி பண்ணை உரிமையாளர் ஒருவர் கூறியதாவது.-

முட்டைக் கோழிக்கு தேவையான தீவனங்கள் பீகார், உத்தரபிரதேசம், ஜார்கண்டு போன்ற மாநிலங்களில் இருந்து வருகின்றன. தற்போது ஏற்பட்டுள்ள கடும் வறட்சியாலும், வெயின் தாக்கத்தாலும் சூடு காரணமாக கோழிகளின் உயிரிழப்பு அதிகரித்துள்ளது.

எனவே கோழிகளை பாதுகாக்க கோழி பண்ணை சுற்றிலும் காட்டன் தார்ப்பாய்கள் அமைத்து, அதில் தண்ணீர் ஊற்றி, ஏர்கூலர் வைத்துள்ளோம்.

இதன் மூலம் வெயிலின் தாக்கம் குறைந்து முட்டை கோழிகளின் இறப்பு தவிர்க்கப்படும். எனினும் இவற்றையும் மீறி வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் கோழிகளின் இறப்பு அதிகமாக உள்ளது. வறட்சியால் முட்டை உற்பத்தியும் குறைந்துள்ளது.

உற்பத்தி குறைந்துள்ள நிலையில் ஒரு முட்டைக்கு கொள் முதல் விலையாக ரூ.4 கிடைத்தால் தான் கட்டுபடியாகும். ஆனால் முட்டை வாங்குபவர்களிகன் எண்ணிக்கை குறைந்துள்ளதால் முட்டை விலை உயரவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News