செய்திகள்

ராணுவ கண்காட்சிக்கு வந்த ரஷ்யா அதிகாரி கடலில் மூழ்கி பலி

Published On 2018-04-10 15:03 IST   |   Update On 2018-04-10 15:03:00 IST
மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில் நடைபெறவுள்ள ராணுவ கண்காட்சியில் பணியாற்ற வந்த ரஷ்யா அதிகாரி கடலில் மூழ்கி பலியானார்.
மாமல்லபுரம்:

மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில் ராணுவ கண்காட்சி நாளை முதல் 14-ந்தேதி வரை நடக்கிறது. இதில் 40-க்கும் மேற்பட்ட நாடுகளின் ராணுவ தளவாட உற்பத்தி நிறுவனங்கள், அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக ரஷ்யாவை சேர்ந்த ராணுவ தளவாட விற்பனை பிரிவில் பணியாற்றி வந்த இகோர் (வயது 55) என்பவர் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மாமல்லபுரம் வந்தார். அவர் மாமல்லபுரம் கடற்கரை கோயில் அருகே உள்ள ரிசார்ட்டில் உடன் வந்த ஊழியர்களுடன் தங்கி இருந்தார்.

இன்று மதியம் இகோர், தன்னுடன் பணிபுரியும் பெண் ஒருவருடன் ரிசார்ட் அருகே கடலில் குளித்தார்.

அப்போது ராட்சத அலை இகோரை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த, உடன் இருந்த பெண் கூச்சலிட்டார்.

அக்கம் பக்கத்தினர் உடனடியாக இகோரை மீட்டனர். மயக்க நிலையில் இருந்த அவரை மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் போகும் வழியிலேயே இகோர் பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.

இகோர் பலியானது குறித்து ரஷ்ய நாட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ராணுவ கண்காட்சி நாளை மறுநாள் தொடங்க உள்ள நிலையில் ரஷ்ய நாட்டு அதிகாரி கடலில் மூழ்கி பலியான சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

Similar News