செய்திகள்

3 சகவீரர்களை சுட்டுக்கொன்ற வழக்கு - சி.ஐ.எஸ்.எப் வீரருக்கு மூன்று ஆயுள் தண்டனை

Published On 2018-04-09 19:02 IST   |   Update On 2018-04-09 19:02:00 IST
கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் 3 சகவீரர்களை சுட்டுக்கொன்ற வழக்கில் கைதான சி.ஐ.எஸ்.எப் வீரருக்கு மூன்று ஆயுள் தண்டனை விதித்து செங்கல்பட்டு கோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை:

காஞ்சிபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையம், சென்னை அணுமின் நிலையம் மற்றும் பாபா அணு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ளன. இதில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குடியிருப்பு அருகிலேயே உள்ளது. இப்பகுதியில் சுமார் ஆயிரம் வீரர்கள் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 6-ம் தேதி சி.ஐ.எஸ்.எப் அலுவலக முதல் மாடியில் உள்ள அறையில் தலைமைக் காவலர் மோகன்சிங் (57) கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது காலை நேர பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதற்காக அதிகாலை 5:15 மணிக்கு பாதுகாப்புப் படை வீரர் விஜய்பிரதாப்சிங் (40) அங்கு வந்தாதுள்ளார்.

ஆயுதக்கிடங்கில் 9 எம்எம் ரக துப்பாக்கியை பெற்றுக்கொண்டு மாடிக்குச் சென்ற அவர் அங்கு தூங்கிக் கொண்டிருந்த மோகன்சிங் மீது திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில் மோகன் சிங் அதே இடத்திலேயே உயிரிழந்தார்.

துப்பாக்கி சத்தம் கேட்டதும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மற்ற வீரர்கள் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்வதற்காக ஆங்காங்கே பதுங்கினர். மோகன்சிங்கை கொன்றுவிட்டு மாடியில் இருந்து கீழே வந்த விஜய்பிரதாப்சிங், அங்கு பதுங்கியிருந்த பாதுகாப்பு படையின் கூடுதல் உதவி ஆய்வாளர் கணேசன் (54), சக வீரர்கள் கோவர்தணன் பிரசாத் (42), பிரதாப்சிங் (57) மற்றும் தலைமை காவலர் சுப்புராஜ் (58) ஆகியோரை நோக்கி துப்பாக்கியால் 20 ரவுண்டுகள் சரமாரியாக சுட்டார்.

இதில் கணேசன், சுப்புராஜ் ஆகியோர் அதே இடத்திலேயே இறந்தனர். பிரதாப்சிங்குக்கு அடி வயிற்றில் மூன்று குண்டுகள் பாய்ந்தது. துப்பாக்கிச் சத்தம் கேட்டு வந்த மற்ற வீரர்கள் விஜய் பிரதாப் சிங்கை மடக்கி பிடித்து துப்பாக்கியை பறித்தனர்.

விஜய் பிரதாப் சிங் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார். இந்த வழக்கு செங்கல்பட்டு கோர்ட்டில் நடந்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்ட விஜர் பிரதாப் சிங் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவரை குற்றவாளி என அறிவித்த நீதிபதி, மூன்று ஆயுள் தண்டனையுடன் 10 ஆண்டுகள் சிறை தண்டனையும் 15 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். #CSIF #TamilNews

Similar News