செய்திகள்

செந்துறை அருகே பொதுமக்களிடம் இருந்து தப்பிய கொள்ளையன் ஏரியில் மூழ்கி பலி

Published On 2018-03-29 15:38 IST   |   Update On 2018-03-29 15:38:00 IST
செந்துறை அருகே பொதுமக்களிடம் இருந்து தப்பிய கொள்ளையன் ஏரியில் மூழ்கி பலியான சம்பவம் செந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறையில் தீமிதி திடல் அருகே இருசக்கர வாகனம் ஒன்று நின்று கொண்டிருந்தது. நிறுத்தப்பட்டிருந்தது. அதனை திருடிக்கொண்டு வந்த வாலிபர் ஒருவர் போலீஸ் நிலையம் அருகே உள்ள இரு சக்கர வாகன பழுது பார்க்கும் கொண்டு கடைக்கு வந்தார்.

கடை உரிமையாளரிடம் வண்டியை ஸ்டார்ட் செய்து தரும்படி கேட்டுவிட்டு, தனது வண்டிக்கு அனைத்து லாக்குகளையும் மாற்ற எவ்வளவு செலவு ஆகும் என்று கேட்டுள்ளார்.

ஆனால் சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் இந்த வண்டி என்னுடைய நண்பருக்கு சொந்தமானது, நீ எப்படி எடுத்து வந்தாய் என்று கேட்டவுடன் திருடன் செந்துறை ஜெயங்கொண்டம் சாலையில் மருதூர் நோக்கி அந்த வாலிபர் வாகனத்தில் தப்பினார்.

இதையறிந்த கடை உரிமையாளர் மற்றும் பொது மக்கள் தப்பியோடிய திருடனை விரட்டி சென்றார்கள். இதில் தப்பி ஓடிய திருடன் பொன்பரப்பி பெரிய ஏரி அருகே குறுக்கு வழியில் சென்று விடலாம் என நினைத்து இடது புறமாக திருப்பியுள்ளார்.

ஆனால் திரும்பும்போது நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். மேலும் பொது மக்கள் தன்னை துரத்தி வருவதை அறிந்த திருடன் எழுந்து அருகில் இருந்த ஏரியில் குதித்து தப்பி விடலாம் என நினைத்து குதித்துள்ளார்.

ஆனால் பொது மக்கள் ஒரு மணி நேரமாக ஏரியை சுற்றி தேடியுள்ளனர். திருடன் தண்ணீரில் நீந்தி அடுத்த கரை வழியாக தப்பியிருக்கலாம் என நினைத்து கலைந்து சென்றுவிட்டனர். இந்த நிலையில் நேற்று ஏரிக்கு குளிக்க வந்தவர்கள் சிலர் ஏதோ சடலம் மிதப்பதாக கூறினர். இதை கேள்விப்பட்டு ஊர்மக்கள் கூட்டம் கூடியது.

தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடம் வந்த செந்துறை போலீசார் விசாரணை செய்ததில் அந்த வாலிபர் நாச்சியார் பேட்டை மேற்கு தெருவைச்சேர்ந்த கலியபெருமாள் மகன் தளபதி (22)என்பது தெரியவந்தது. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் செந்துறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News