செய்திகள்

அரியலூரில் சிறையில் இருந்து தப்பிய கைதி பிடிபட்டார்

Published On 2018-03-23 22:05 IST   |   Update On 2018-03-23 22:05:00 IST
அரியலூரில் சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதியை ஜோலார்பேட்டையில் வைத்து போலீசார் மடக்கி பிடித்தனர்.
அரியலூர்:

அரியலூர் பஸ் நிலையம் எதிரே சிறைச்சாலை (சிறுவர் சீர்திருத்தப்பள்ளி) உள்ளது. இந்த சிறைச்சாலையில் கடந்த 19-ந் தேதி வழக்கம் போல் சிறையில் உள்ளவர்கள் மதிய உணவு சாப்பிடுவதற்காக அறை கதவு திறந்து விடப்பட்டது. கழிவறைக்கு சென்ற சிறை கைதி நாயகனைபிரியாள் கிராமத்தை சேர்ந்த காமராசன் மகன் மணிகண்டன் (வயது 19) திடீரென சுவர் ஏறி குதித்து தப்பி ஓடிவிட்டார். 

இது குறித்து சிறை கண்காணிப்பாளர் பாலு, அரியலூர் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய மணிகண்டனை தேடி வந்தனர். இந்நிலையில் தப்பியோடிய கைதியை பிடிக்க திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம் தனிப்படை அமைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீஸ் சூப்பிரண்டு நிஜிலா ராஜேந்திரன் தலைமையில், சிறைத்துறை தலைமை காவலர்கள் பட்டுக்கோட்டை மணிகண்டன், செந்தில்குமார், அரியலூர் பாலசுப்பிரமணியன், தஞ்சை கமானந்தன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் மணிகண்டன் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர். 

பின்னர் தொலைபேசி உரையாடலை ஆய்வு செய்தனர். இதில் வேலூர் மாவட்டம் ஜோலார் பேட்டையில் உள்ள தனது அக்காள் வெண்ணிலா வீட்டில் அவர் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று மணிகண்டனை பிடித்தனர். பின்னர் போலீசார் மணிகண்டனை திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Similar News