செய்திகள்

அரியலூரில் மரக்கன்றுகள் நடும் விழா- அரசு தலைமை கொறடா தொடங்கி வைத்தார்

Published On 2018-03-19 22:34 IST   |   Update On 2018-03-19 22:34:00 IST
அரியலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.
அரியலூர்: 

அரியலூர் மாவட்ட வனத்துறையின் சார்பில், மரம் வளர்ப்பு திட்டத்தில் மரக்கன்றுகள் நடும் விழா கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வளாகத்தில் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். 

சிறப்பு விருந்தினராக அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டு வைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி, ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி சுமார் 70 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அதன்படி, தமிழகத்தில் 32 மாவட்டங்களிலும் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. அரியலூர் மாவட்டத்தில் 44 ஆயிரத்து 138 மரக்கன்றுகள் நடப்பட உள்ளது. இதில், மாவட்ட வனத்துறையின் சார்பில் அடர்த்தி குறைவான காடுகளில் 24 ஆயிரத்து 138 மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் 20 ஆயிரம் மரக்கன்றுகளும் நடப்பட உள்ளது. மாவட்ட வனத்துறையின் சார்பில், நடப்பாண்டிற்கு தேக்கு, செம்மரம், பெருமரம், எலுமிச்சை மரம், பலா, மாதுளை, கொய்யா, வேம்பு ஆகிய மரக்கன்றுகள் விவசாய பட்டா நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு சுமார் 1 லட்சத்து 10 ஆயிரம் மரக்கன்றுகளை இம்மாவட்டம் முழுவதும் வழங்கப்பட உள்ளது. 

இத்திட்டத்தினை இம்மாவட்ட விவசாய பெருங்குடி மக்கள் பயன்படுத்தி அரியலூர் மாவட்டத்தை பசுமையாக்கிட வேண்டும் என்று கூறினார். இதில் மாவட்ட வன அலுவலர் மோகன் ராம், வனவியல் விரிவாக்க அலுவலர் (விரிவாக்க கோட்டம் பெரம்பலூர்) இளங்கோவன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி புகழேந்தி, கீழப்பழுவூர் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் மொழியரசி, வனச்சரக அலுவலர் கணேசன், வனவர் சக்திவேல், வனக்காப்பாளர் சிவக்குமார் மற்றும் ஆசிரியர் பயிற்சி மாணவிகள், அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News