சொத்து தகராறில் தங்கையை தாக்கிய அண்ணன் கைது
செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள சிறுகளத்தூரில் வசிப்பவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி கமலம். இவர்களுக்கு பொன் குடிக்காட்டில் கமலத்தின் அண்ணன் அண்ணாதுரை வீடு அருகே வீட்டு மனை உள்ளது. இதில் இரு குடும்பதினருக்கும் இடையே எல்லை தகராறு இருந்து வந்தது.
பொன் பரப்பி ஊராட்சி சார்பில் பொன் குடிக்காட்டில் உள்ள ரவிசந்திரன் வீட்டு மனை முன்பு குடிநீர் தொட்டி அமைக்க முடிவு செய்யப்பட்டது. தகவலறிந்த ரவி சந்திரன் ,ஊராட்சி செயலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் அங்கு குடிநீர் தொட்டி அமைக்கக் கூடாது என கோரிக்கை மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் கமலத்தின் அண்ணன் அண்ணாதுரை பிரச்சினைக்குரிய இடத்தில் போர் போடுவதற்காக போர் வெல் இயந்திரத்தை கொண்டு வந்தார். இதனை ரவிசந்திரன், கமலம் தடுத்தனர்.
அப்போது அண்ணாதுரை மற்றும் உறவினர்கள் இவர்களை தாக்கியுள்ளனர், காயமடைந்த ரவி சந்திரன், கமலம் ஆகியோர் தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பாக செந்துறை போலீஸ் நிலையத்தில் ரவிசந்திரன் கொடுத்த புகாரின் பேரில் அண்ணாதுரை அவரது மனைவி இளவரசி, மகன் அருண்குமார் மற்றும் உறவினர் இளவரசன் மீது வழக்குபதிவு செய்து அண்ணாதுரையை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மற்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.