செய்திகள்

அரியலூரில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம்

Published On 2018-03-17 22:06 IST   |   Update On 2018-03-17 22:06:00 IST
அரியலூரில் வக்கீல்கள் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தாமரைக்குளம்:

குற்றவியல் நீதிமன்றம், மகளிர் நீதிமன்றம், நுகர்வோர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்கள் அரியலூரில் வெவ்வேறு இடங்களில் அமைந்துள்ளன. இதனால் பொதுமக்களும் வக்கீல்களும் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வேண்டும் என்று அரியலூர் மாவட்ட வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதற்கான மனுவை மறைந்த முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவிடம் அளித்திருந்தனர். அவரும் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட ஆவன செய்வதாக உறுதியளித்திருந்தார். அவர் மறைவிற்கு பின்னர் அரியலூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் வக்கீல்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் இல்லை.

இந்நிலையில் நேற்று முன் தினம் தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் கூட அரியலூரில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைப்பது குறித்து அறிவிக்கப்படவில்லை. இதையடுத்து அரியலூர் வக்கீல்கள் சங்கத்தினர், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் கட்ட வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். அதன்படி அவர்கள் நேற்று நீதிமன்ற பணிகளை புறக் கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

ஆர்ப்பாட்டத்துக்கு சங்க தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். சங்க செயலாளர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான வக்கீல்கள் கலந்து கொண்டனர். முடிவில் பொருளாளர் கொளஞ்சி நன்றி கூறினார். தொடர்ந்து வக்கீல்கள், மாவட்ட கலெக்டர் அலுவலகம் முற்றுகை, சாலை மறியல், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Similar News