கோடியக்கரையில் இறந்து கரை ஒதுங்கும் ஆலிவர்ரெட்லி ஆமைகள்
வேதாரண்யம்:
ஆழ்கடல் பகுதியில் இரை தேடி வரும் அபூர்வ வகை ஆலிவர்ரெட்லி ஆமைகள் இனப்பெருக்கத்திற்காக தமிழ்நாட்டின் கடலோர மணல் பாங்கான பகுதிகளில் வந்து குழி தோண்டி முட்டையிட்டு திரும்பி செல்கின்றன.
இந்த முட்டைகள் 45 நாட்களுக்கு பிறகு பொரித்து குஞ்சுள் கடலுக்குள் சென்று விடும். கடற்கரை பகுதியில் இடும் முட்டைகளை சமூக விரோதிகள் திருடிச் சென்று விடுகிறார்கள்.
வனத்துறையினர் அழிந்து வரும் ஆமை இனத்தை காப்பாற்ற முட்டைகளை சேகரித்து வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் உள்ள ஆமை குஞ்சுகள் பொரிப்பகத்தில் முட்டைகளை பாதுகாத்து குஞ்சுகள் வெளிவந்தவுடன் அதை கடலில் விடுவார்கள்.
இந்நிலையில் இனப் பெருக்கத்திற்காக கடற்கரை பகுதியில் மணற்பாங்கான இடத்திற்கு ஆழ்கடல் பகுதியிலிருந்து பல ஆயிரம் கிலோமீட்டர் கடந்து வரும் இந்த ஆமைகள் கப்பல், பெரிய விசைப்படகு, மீன்பிடி வலைகளில் சிக்கி இறந்து கரை ஒதுங்குவது சர்வசாதாரண நிகழ்ச்சியாக உள்ளது. இந்த ஆண்டு கடந்த 10-ந் தேதி வரை கோடியக்கரை பகுதியில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அபூர்வ வகை கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இயற்கை ஆர்வலர்கள் வேதனை அடைந்துள்ளனர். இதையடுத்து வனத்துறையினர் கூடுதல் கவனம் செலுத்தி ஆமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். #tamilnews