அரியலூர் அருகே அறுவடை எந்திரம் கவிழ்ந்து பெண் பலி
ஆர்.எஸ்.மாத்தூர்:
அரியலூர் மாவட்டம் செந்துறை பெருமாள் கோவில் பின்புற பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் நெல் பயிரிடப்பட்டிருந்தது. தற்போது அவை அறுவடை செய்யப்பட்டு வருகின்றன. இதில் விவசாயிகள் மற்றும் பெண்கள் என ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் ஆதிகுடிக்காடு பகுதியை சேர்ந்த அன்னக்கிளி (வயது 30), பழனியம்மாள் (45), அசலம்பாள் (39) ஆகியோர் அறுவடை பணியில் ஈடுபடுவதற்காக இன்று காலை வீட்டில் இருந்து புறப்பட்டனர்.
அப்போது அந்த வழியாக அறுவடை பணிக்கு டிராக்டர் மூலம் இழுத்து செல்லப்பட்ட அறுவடை எந்திரத்தின் மீது ஏறி 3 பேரும் அமர்ந்து சென்றனர். டிராக்டரை ஆதிகுடிக்காடு பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் (35) ஓட்டிச் சென்றார்.
பெருமாள் கோவில் அருகே வயல் பகுதிக்கு சென்றதும், அங்குள்ள வரப்புகளில் டிராக்டர் ஏறிச் சென்ற போது திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. அப்போது 3 பேரும் அறுவடை எந்திரத்தின் அடியில் சிக்கிக் கொண்டனர். அவர்களது அலறல் சத்தம் கேட்டு, அங்கு விவசாய பணியில் ஈடுபட்டிருந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து அறுவடை எந்திரத்தை தூக்கி நிறுத்தினர். அதன்பிறகு உள்ளே இருந்த 3 பேரையும் மீட்டனர். அப்போது அவர்கள் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். உடனே சம்பவ இடத்திற்கு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, அரியலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு 3 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அன்னக்கிளி பலியானார்.
டிராக்டர் டிரைவர் ராமச்சந்திரன் குடிபோதையில் டிராக்டரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விபத்து நிகழ்ந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக செந்துறை போலீசார், டிரைவர் ராமச்சந்திரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே அறுவடை எந்திரம் கவிழ்ந்து விபத்துக் குள்ளானதில் 2 பேர் பலியாகினர். இந்நிலையில் இன்று அரியலூர் அருகே பெண் ஒருவர் பலியான சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது.