செய்திகள்

ஆசனூர் வனப்பகுதியில் பொதுமக்களை பயமுறுத்தி வரும் ஒற்றை யானை

Published On 2018-03-14 09:12 IST   |   Update On 2018-03-14 09:12:00 IST
ஆசனூர் வனப்பகுதியில் ஒற்றை யானை ஒன்று ரோட்டில் நடமாட தொடங்கி உள்ளதால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

சத்தியமங்கலம்:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் வனப்பகுதி தற்போது கோடையின் பிடியில் சிக்கி உள்ளது.

இதனால் வனப்பகுதியில் உள்ள யானைகள் உள்பட வனவிலங்குகள் வெளியே நடமாட தொடங்கி உள்ளது.

குறிப்பாக வனப் பகுதி ரோட்டோர தரைப்பாலத்தின் பள்ளத்திலும் ரோட்டையொட்டி உள்ள குட்டையில் தண்ணீர் இருப்பதால் யானைகள் தண்ணீர் தேடி இப்போது வெளியே நடமாடத் தொடங்கி உள்ளது.

குறிப்பாக தலமலை, ஆசனூர், கேர்மாளம் வனப்பகுதியில் பட்டப் பகலிலும் யானைகள் வெளியே நடமாட தொடங்கி உள்ளது.

ஆசனூர் வனப்பகுதியில் கேர்மாளத்திலிருந்து கர்நாடக மாநிலம் கொள்ளேகால் செல்லும் ரோடு மிகவும் அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த பகுதியில்தான் காட்டு யானைகள் சர்வ சாதாரணமாக ரோட்டை நடக்கிறது. ரோட்டோரமாக மேய்ந்து வருகிறது.

இதில் கடந்த சில நாட்களாக ஒற்றை யானை ஒன்று அப்பகுதியில் அடிக்கடி பிளிறியபடி ரோட்டை கடந்து செல்கிறது.

இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளையும் அப்பகுதி வழியாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களும் கவனமாக செல்லும்படியும் வனத்துறை அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

ரோட்டில் யானை, காட்டெருமை மற்றும் வேறு எந்த வன விலங்குகளும் நடமாடினாலோ ரோட்டை கடக்க முயலும் போதோ வாகன ஓட்டிகள் அதிக ஒலி எழுப்ப வேண்டாம், விலங்குகள் ரோட்டை கடந்து போன பிறகு ரோட்டை கடந்து செல்ல வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் அடர்ந்த வனப்பகுதியில் வன விலங்குகளை பார்க்கும் ஆவலில் வண்டியை விட்டு இறங்க வேண்டாம். புகைப்படமும் எடுக்க வேண்டாம் எனவும் வன அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Similar News