நிலக்கடலை கொள்முதல் விலை வீழ்ச்சி- விவசாயிகள் வேதனை
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்காவில் கத்தரிப்புலம், புஷ்பவனம், பெரியகுத்தகை, செம்போடை, நாகக் குடையான், நாலுவேதபதி, ஆயக்காரன்புலம் உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
வேதாரண்யம் பகுதியில் வழக்கமாக குறுவை, ஜெ.எல். போன்ற கடலை ரகங்களைத்தான் விவசாயிகள் பயிர் செய்து வந்தனர். ஆனால் இந்த ஆண்டு ஆந்திராவில் இருந்து சி-2, சி-7 விதைக்கடலை வாங்கி வந்து பெரும்பாலான விவசாயிகள் சாகுபடி செய்துள்ளனர். அதற்கு காரணம் அதிக மகசூல் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்தனர்.
ஆனால் கடலை சாகுபடியில் பல்வேறு நோய் தாக்குதல்களும் தண்ணீர் பற்றாகுறையினாலும் சரிவர விளைச்சல் இல்லை. மேலும் கடலையை வியாபாரிகள் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்கின்றனர்.
கடந்த ஆண்டு கடலை கிலோ 60ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். .ஆனால் இந்த ஆண்டு கிலோ ரூ.30-க்கு கொள்முதல் செய்கின்றனர். விளைச்சல் சரி இல்லாததாலும் விலை வீழ்ச்சி ஏற்பட்டதாலும் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலையில் உள்ளனர்.
எனவே நிலக்கடலை சாகுபடி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.