செய்திகள்

கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும்- விவசாயிகள் கோரிக்கை

Published On 2018-03-12 16:19 IST   |   Update On 2018-03-12 16:19:00 IST
கொள்ளிடம் ஆற்றில் புதிய தடுப்பணை கட்ட பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சீர்காழி:

நாகை மாவட்டம் கொள்ளிடத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம், காட்டு மன்னார்குடி, குமராட்சி, நாகை மாவட்டம், மயிலாடுதுறை, சீர்காழி மற்றும் கொள்ளிடம் பகுதிகளை சேர்ந்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஒருங்கிணைந்த கொள்ளிடம் தடுப்பணைக்குழு கூட்டம் நடைபெற்றது.

குழு தலைவர் விஜய்பாரி தலைமை வகித்தார். அழகுராஜ் வரவேற்றார். ஊழல் தடுப்பு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தலைவர் ஜெகசண்முகம், சிதம்பரம் விவசாய சங்கத் தலைவர் ரவீந்திரன், திருப்பாற் கடல் விவசாய சங்கத் தலைவர் செங்குட்டுவன் முன்னிலை வகித்தனர். சிதம்பரம் விவசாயிகள் சங்கத் தலைவர் சந்திரபாண்டியன் சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில் கொள்ளிடம் ஆற்றின் கரையோரம் வசிக்கும் கிராம மக்களின் வாழ்வாதாரம் உப்பு நீரால் கேள்விக்குறியாகி உள்ளது. மக்கள் சுட்டிக் காட்டும் இடத்தில், கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே தடுப்பணைக்கட்ட நிதி ஒதுக்க வேண்டும். தடுப்பணைக் கட்டத் தவறினால் கடலூர் மற்றும் நாகை மாவட்ட மக்கள் தண்ணீரின்றி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வெளியூர்களுக்கு இடம் பெயரும் அபாயம் ஏற்படும்.

வரும் 15-ம்தேதி அறிவிக்கப்படும் பட்ஜெட் அறிக்கையில் தடுப்பணைக்கான திட்டவரைவுக்கு ஒப்புதல் வழங்கி நிதி ஒதுக்கீடு செய்து, இந்த நிதி ஆண்டிலேயே தடுப்பணைக் கட்ட வேண்டும். இல்லை என்றால்ஆயிரக் கணக்கான விவசாயிகள் திரண்டு முன்னறிவிப்பு இல்லாத மாபெரும் போராட்டத்தை நடத்துவது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

குமராட்சி விவசாயிகள் சங்கத்தலைவர் நீலமேகம், சிதம்பரம் நகர வர்த்தக சங்கத் தலைவர் சதீஷ், விவசாயி கலைச்சந்திரன், கொள்ளிடம் தெற்குராஜன் வாய்க்கால் பாசனதாரர்கள் சங்கத் தலைவர் சீராளன், கலைச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ராஜவேல் நன்றி கூறினார்.

Similar News