வேதாரண்யத்தில் மாமரம் பூக்கள் உதிர்வதால் விவசாயிகள் கவலை
வேதாரண்யம்:
வேதாரண்யம் தாலுக்காவில் கத்தரிப்புலம், செம்போடை, தேத்தாகுடி, புஷ்பவனம், குரவப்புலம், நாலுவேதபதி உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 5000 ஏக்கரில் மா சாகுபடி நடைபெறுகிறது. இப்பகுதியில் ஒட்டு, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீலம், ருமேனியா உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட மாங்காய் ரகங்களை இப்பகுதியில் விளைகின்றன. மாம்பழ சீசன் காலத்தில் இப்பகுதியில் சுமார் 10 ஆயிரம் டன் கேரளா, கர்நாடகா, மும்பை உள்ளிட்ட மாநிலங்களுக்கும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படும்.
ஆண்டுதோறும் பிப்ரவரி மாதத்தில் மாமரங்கள் பூக்கத் துவங்கி மார்ச் மாதத்தில் மாம்பிஞ்சுகள் விடும். ஆனால் தற்போது மாமரங்கள் பூக்குகிறதை தவிர பிஞ்சுகள் விடுவதில்லை. மாம்பூக்கள் அனைத்தும் கருகிவிடுகிறது. விவசாயிகள் மாமரத்தை காய்ப்பதற்கு பலமுறை ரசாயன மருந்துகளை அடித்தும் எந்த பயனும் இல்லை. மேலும் தத்துப்பூச்சி மாவுப்பூச்சி தாக்குதலும் அதிகமான பனியாலும் பூக்கள் கருகிவிடுகிறது. இப்பகுதியில் மரத்தில் மாங்காய்களை காய்க்க வைப்பதற்கு விவசாயிகள் கடுமையான ரசாயன மருந்துகளை பயன்படுத்துகின்றனர்.
இதனால் மரங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்த ஆண்டு ரசாயன மருந்து அடிக்காமல் மாங்காய்களை காய்க்க வைக்கும் விவசாயிகளுக்கும் பிஞ்சு பிடிக்கவில்லை. பூத்த பிஞ்சுகள், பூக்கள் அனைத்தும் கருகி கொட்டுகின்றன. இந்த பாதிப்பு தொடர்ந்தால் இந்த ஆண்டு மா விவசாயம் முற்றிலும் பாதிக்கப்படும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கடுமையான ரசாயன உரம், கடும் வெப்பம், பருவ நிலை மாற்றம் இவற்றால் மா விளைச்சல் பாதிக்கப்பட்டிருக்கலாம். எனவே ஒரு லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தோட்டக் கலைத்துறையினர் தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.