செய்திகள்
திருமானூரில் விவசாயிகள் சாலை மறியல்
அய்யாக்கண்ணு தாக்கப்பட்டதை கண்டித்து திருமானூரில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருமானூர்:
தென்னிந்திய தேசிய நதிகள் இணைப்புச் சங்க தலைவர் அய்யாக்கண்ணு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய கோரி கன்னியாகுமரியிலிருந்து சென்னை நோக்கி நடைப் பயண விழிப்புணர்வு பேரணி சென்ற போது திருச்செந்தூரில் ஒரு பெண்ணால் தாக்கப்பட்டார்.
இந்நிலையில், விவசாய சங்க தலைவர் அண்ணாக்கண்ணுவை தாக்கிய பெண்ணை கைது செய்து அவர் மீது குண்டர் சட்ட போட வலியுறுத்தி திருமானூர் பேருந்து நிலையம் அருகே விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அரியலூர்- தஞ்சாவூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த திருமானூர் போலீசார் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்க பிரதி நிதிகள் 15 பேரை கைது செய்து மாலை விடுவித்தனர். முன்னதாக அய்யாக்கண்ணுவை தாக்கிய பெண்ணின் உருவ படத்தை தீயிட்டு எரித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங்க மாவட்ட துணை செயலாளர் வைத்தியநாதன் தலைமை வகித்தார். தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கத்தினர் ஜெயபால், மணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட துணை தலைவர் ஆறுமுகம், மக்கள் சேவை இயக்க தலைவர் தங்க.சண்முக சுந்தரம், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மாநில செயற்க்குழு உறுப்பினர் உதயகுமார், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் தேவர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் புனிதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #tamilnews