செய்திகள்

ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

Published On 2018-01-31 20:46 IST   |   Update On 2018-01-31 20:46:00 IST
100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்களுக்கு முறையாக வேலை வழங்கப்படாததை கண்டித்து ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.
வாரியங்காவல்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஜெயங்கொண்டம் ஒன்றிய பகுதி பொதுமக்கள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தினர் மனு கொடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட குழு உறுப்பினர் உத்திராபதி தலைமை தாங்கினார். 

ஒன்றிய செயலாளர் பிச்சைபிள்ளை, ஒன்றிய தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகாராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் மணிவேல், மாநில குழு உறுப்பினர் சின்னதுரை ஆகியோர் பேசினர். இதில், ஜெயங்கொண்டம், ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 100 நாள் வேலை திட்டத்தில் பொதுமக்களுக்கு முறையாக வேலை வழங்கவில்லை. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் வேலை செய்தவர்களுக்கு முறையாக ஊதியம் வழங்கப்படவில்லை.

100 நாள் வேலை திட்டத்தினை மாற்றி 200 நாட்கள் பணி வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் அதிகாரிகள் யாரும் வராததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதுகுறித்து தகவலறிந்து வந்த ஜெயங்கொண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேலுசாமி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை தொடர்ந்து பொதுமக்கள், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) குருநாதனிடம், மனு அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். முன்னதாக ஜெயங்கொண்டம் காந்தி பூங்காவிலிருந்து ஒன்றிய அலுவலகத்திற்கு ஊர்வலமாக வந்தனர். #tamilnews

Similar News