செய்திகள்

கட்டண உயர்வு எதிரொலி: ஈரோடு பஸ் நிலையத்தில் குறைந்தது பயணிகள் கூட்டம்

Published On 2018-01-22 16:47 IST   |   Update On 2018-01-22 16:47:00 IST
அரசு பேருந்து கட்டணம் அதிகரித்ததன் காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறையத் தொடங்கி உள்ளது.
ஈரோடு:

பஸ் கட்டணம் திடீரென உயர்ந்திருப்பதை இன்னமும் பொதுமக்களால் ஜீரணிக்க முடியவில்லை.

ஈரோடு மாவட்ட மக்களும் இன்னமும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஈரோட்டில் இருந்து பக்கத்து ஊர்களான பவானி, பள்ளிபாளையம், பெருந் துறை, குமாரபாளையம் முதல் தூரத்தில் உள்ள திருப்பூர், சேலம், நாமக்கல், கோவை ஆகிய ஊர்களுக்கும் அடிக்கடி பொதுமக்கள் சென்று வருகிறார்கள். இதில் பலர் தினமும் வெளியூர்களுக்கு வேலைக்கு சென்று வருகிறார்கள். இவர்களின் பாடும் திண்டாட்டம் ஆகி உள்ளது. சம்பளத்தில் கிடைக்கும் பணத்தின் ஒரு பகுதி பஸ்சுக்காகவே போய் விடும். பட்ஜெட்டில் பெரிய இடி விழுந்தது போல் அவர்கள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பஸ் பயணம் என்றாலே பலர் இப்போது அலர்ஜியாகி அலற தொடங்கி உள்ளனர். வேலைக்கு பஸ்களில் போவோர்களுக்கு வேறு வழியில்லை. எப்படியும் போய்தான் ஆக வேண்டும் என்ற நிலை.

அதே சமயம் அடிக்கடி தங்களது உறவினர்கள் நண்பர்கள் ஊர்களுக்கு செல்பவர்கள் கடந்த 2 நாட்களாக பஸ்களில் போவதை தவிர்க்கத் தொடங்கி உள்ளனர். இன்னும் பலர் வெளியூர் விசேசம் என்றால் தங்களது இருசக்கர வாகனத்தில் செல்ல தொடங்கி விட்டார்கள்.

ஈரோட்டிலிருந்து திருப்பூர், கோவைக்கு கிட்டத்தட்ட இரு மடங்கு கட்டண உயர்வால் பஸ்சுக்கு கொடுக்கும் கட்டணத்தில் பெட்ரோல் ஊற்றி ஜாலியாக இளைஞர்கள் வெளியூர் செல்ல தொடங்கி உள்ளனர்.

இன்னும் பலர் அதாவது வேலைக்காக திருப்பூர், சேலம், கோவை, கரூர் செல்பவர்கள் பஸ்சில் போவதை நிறுத்திக் கொண்டு ரெயில்களில் போகத் தொடங்கி உள்ளனர்.

இதனால் ஈரோடு ரெயில் நிலையத்தில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது. அதே சமயம் ஈரோடு பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் குறையத் தொடங்கி உள்ளது.

வழக்கமாக காலை நேரத்தில் ஈரோடு பஸ் நிலையம் ஜே.ஜே.வென இருக்கும். ஆனால் 2 நாட்களாக களை இழந்து கிடக்கிறது. அரசு பஸ்களிலும் கூட்டத்தை காண முடியவில்லை.

அரசு பஸ்சைபோல் தனியார் பஸ்களிலும் கட்டணம் உயர்த்தப்பட்டாலும் அரசு பஸ்களை விட குறைவான கட்டணம் என்பதால் தனியார் பஸ்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது.

குறிப்பாக சேலம், நாமக்கல், திருப்பூர், கோவை, கரூர், கொடுமுடி செல்லும் பயணிகள் அரசு பஸ்களை தவிர்த்து நின்று கொண்டு போனாலும் பரவாயில்லை என தனியார் பஸ்களை நா(தே)டி செல்கிறார்கள்.

Similar News