செய்திகள்
செந்துறை அருகே பெற்றோர் பைக் வாங்கி தராததால் வாலிபர் தற்கொலை
வேலைக்கு செல்ல பெற்றோர் பைக் வாங்கி தராததால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
செந்துறை:
செந்துறை அருகே உள்ள ஆதிக்குடிகாடு கிராமத்தை சேர்ந்தவர் தர்மலிங்கம், விவசாயி. இவரது மகன் ஞானமூர்த்தி (வயது 21), கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் அவரது பெற்றோர் வேலைக்கு செல்லுமாறு கூறி அறிவுறுத்தியுள்ளனர். தான் வேலைக்கு செல்ல வேண்டும் என்றால் தனக்கு பைக் வாங்கி தர வேண்டும் என்று பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். அவரது பெற்றோர் குடும்ப வறுமையை கூறி பைக் வாங்கி கொடுக்க மறுத்து வந்துள்ளனர்.
இது தொடர்பாக நேற்று மீண்டும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் ஞானமூர்த்தி வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அங்கிருந்து சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ஞானமூர்த்தி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து செந்துறை போலீஸ் உதவி ஆய்வாளர் செந்தில்குமார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார். #tamilnews