செய்திகள்

ஈரோடு அருகே தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

Published On 2018-01-19 17:18 IST   |   Update On 2018-01-19 17:18:00 IST
ஈரோடு அருகே தந்தை இறந்த சோகத்தில் மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பவானி:

ஈரோடு அடுத்த சித்தோடு செல்லப்பன் பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி சித்ரா. இவர்களது மகன் யுவராஜ் (வயது 22).

யுவராஜ் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். கடந்த 45 நாட்களுக்கு முன்பு யுவராஜின் தந்தை விஜயகுமார் மாரடைப்பால் உயிரிழந்தார்.

அவர் இறந்த நாள் முதல் யுவராஜ் சோகத்துடன் காணப்பட்டார். தந்தை இறந்ததால் மனம் உடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று வீட்டில் தனியாக இருந்தார்.

அப்போது அவர் எலி மருந்தை (வி‌ஷம்) எடுத்து சாப்பிட்டதாக தெரிகிறது. உயிருக்கு போராடியபடி கிடந்த அவரை அவரது தாய் சித்ரா பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் உதவியுடன் யுவராஜை மீட்டு சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

எனினும் சிகிச்சை பலனின்றி யுவராஜ் நேற்று மாலை பரிதாபமாக இறந்தார். இது குறித்து சித்தோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இன்ஸ்பெக்டர் சிவக்குமார் விசாரணை நடத்தி வருகிறார்.

Similar News