செய்திகள்

கோபியில் ரஜினி-விஜய் ரசிகர்கள் மோதல்: 3 பேர் கைது

Published On 2018-01-15 13:41 IST   |   Update On 2018-01-15 13:41:00 IST
கோபியில் ரஜினி-விஜய் ரசிகர்களிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோபி:

கோபி பாரியூர் கொண்டத்து காளியம்மன் கோவில் திருவிழா நடந்தது.

இதையொட்டி பாரியூர் நஞ்ச கவுண்டன்பாளையம் பிரிவில் ரஜினி ரசிகர்கள் மன்றத்தினர் பேனர் வைத்திருந்தனர்.

இதை பார்த்த விஜய் ரசிகர்களான அதே பகுதியை சேர்ந்த ரத்னவேல், சதீஷ், தியாகு ஆகியோர் அங்கு வந்தனர்.

அங்கு நின்ற ரஜினி ரசிகர்களான ஜெகதீகன் (வயது44),பழனிச்சாமி (46) ஆகியோரிடம் இந்த இடத்தில் எப்படி பேனர் வைக்கலாம்? என்று கேட்டனர்.

இதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் மோதல் ஏற்பட்டது. ரத்னவேல், சதீஷ், தியாகு ஆகிய 3 பேரும் சேர்ந்து கத்தி, பிளேடால் ரஜினி ரசிகர்கள் வைத்திருந்த பேனரை கிழித்தனர்.

மேலும் ஜெகதீசன், பழனிச்சாமி ஆகியோரை கத்தியால் வெட்டி தாக்கினர். கொல்லாமல் விடமாட்டோம் என்று கொலை மிரட்டலும் விடுத்தனர். கத்தி வெட்டில் ஜெகதீசன், பழனிச்சாமி ஆகியோர் காயம் அடைந்தனர்.

இதுகுறித்து கோபி போலீஸ் நிலையத்தில் ஜெகதீசன் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் பாலமுரளி சுந்தரம் வழக்குப்பதிவு செய்து ரத்னவேல், சதீஷ், தியாகு ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.

இந்த சம்பவம் கோபியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews

Similar News