செய்திகள்
350 கிலோ கஞ்சா கடத்திய 3 பேர் சிறையில் அடைப்பு
மதுரையில் இருந்து திருச்சி வழியாக லாரியில் 350 கிலோ கஞ்சா கடத்தி வந்த 3 பேரை போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
புதுக்கோட்டை:
மதுரையில் உள்ள மத்திய போதை பொருட்கள் தடுப்பு பிரிவு சிறப்பு போலீசாருக்கு, சேலத்தில் இருந்து திருச்சி வழியாக திருவாரூருக்கு செல்லும் லாரியில் கஞ்சா கடத்தப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் திருச்சியை அடுத்த துவாக்குடி அருகே உள்ள வாழவந்தான்கோட்டை சுங்க சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி, சோதனை செய்தனர். அப்போது லாரியில் மூட்டை, மூட்டையாக கஞ்சா இருந்ததும், கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து அதனை கடத்தி வந்த 3 பேரிடமும் விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்த சின்னன் மகன் சிவா(வயது 32), சேலம் மாவட்டம் சங்ககிரியை சேர்ந்த மாரிமுத்து மகன் ஆனந்தன்(37), நாகை மாவட்டம் வேதாரண்யத்தை சேர்ந்த ராஜேந்திரன்(61) என்பது தெரியவந்தது. அவர்களை கைது செய்த போலீசார் 350 கிலோ கஞ்சா மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து சிவா உள்பட 3 பேரையும் நேற்று புதுக்கோட்டையில் உள்ள அத்தியாவசிய பண்டங்கள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் வழக்கை விசாரித்து, அவர்கள் 3 பேரையும் வருகிற 25-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரையும் போலீசார் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். #tamilnews