செய்திகள்

விராலிமலை அருகே சாலை தடுப்பில் தனியார் ஆம்னி பஸ் மோதி பெண் பலி

Published On 2018-01-10 17:40 IST   |   Update On 2018-01-10 17:40:00 IST
விராலிமலை அருகே சாலை தடுப்பில் தனியார் ஆம்னி பஸ் மோதிய விபத்தில் பெண் பலியானார். 15 பேர் படுகாயம் அடைந்தனர்.
விராலிமலை:

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து சிதம்பரத்துக்கு நேற்று இரவு தனியார் ஆம்னி பஸ் ஒன்று புறப்பட்டது. பஸ்சை கன்னியாகுமரியை சேர்ந்த பினு (வயது 36) என்பவர் ஓட்டி வந்தார். இதில் கன்னியாகுமரி, மதுரையை சேர்ந்த சுமார் 40 பயணிகள் பயணம் செய்தனர்.

இந்த பஸ் இன்று அதிகாலை 3.45 மணியளவில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் விராலிமலை அருகே உள்ள கொடும்பாளூர் பக்கம் வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் கடுமையான பனி மூட்டம் இருந்ததோடு, சாரல் மழையும் தொடர்ந்து பெய்து கொண்டிருந்தது.

இதில் நிலை தடுமாறிய ஆம்னி பஸ் சாலை தடுப்பில் மோதி தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ்சின் முன்வரிசையில் அமர்ந்திருந்த மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையை சேர்ந்த நிர்மலா (60) இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.

ஓய்வு பெற்ற பள்ளி தலைமை ஆசிரியரான இவர் வேளாங்கண்ணி கோவிலுக்கு சென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த பஸ்சில் பயணம் செய்த 15 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் விபரம் வருமாறு:-

மதுரை ஜோசப் (45) மதுரை, கன்னியாகுமரி சகாய அஸ்வினி (30), ரவிக்குமார் (29), லட்சுமி (28), ராணா ரீடு (36), ஆரோ மினிசா (2), காரைக்கால் கவுதம் (17), திருவனந்தபுரம் சிலுவின் (26), முட்டம் சகாயபிரதீப், ஜான், ஜார்ஜ் பென்னாட் உள்பட படுகாயம் அடைந்த 15 பேரும் மணப்பாறை மற்றும் திருச்சி அரசு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

முன்னதாக விபத்து குறித்த தகவல் கிடைத்த தும் விராலிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன், சப்-இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் போலீசார், மீட்பு குழுவினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை காப்பாற்றினர்.

தேசிய நெடுஞ்சாலையில் நடந்த இந்த விபத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Similar News