செய்திகள்

உத்திரமேரூர் அருகே அரசு பஸ்கள் கண்ணாடி உடைப்பு

Published On 2018-01-08 13:59 IST   |   Update On 2018-01-08 13:59:00 IST
உத்திரமேரூர் அருகே அரசு பஸ் மீதும் கல் வீசி தாக்கப்பட்டதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சீபுரம்:

பஸ் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் இன்று 5-வது நாளாக நீடிக்கிறது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் குறைவான பஸ்களே இயக்கப்பட்டன.

இன்று காலை 8 மணி அளவில் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் இருந்து சென்னை நோக்கி அரசு பஸ் (எண்.148) வந்து கொண்டிருந்தது.

பஸ்சை தற்காலிக டிரைவர் திருவண்ணாமலையை சேர்ந்த நேதாஜி ஓட்டினார். சுமார் 50-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்தனர்.

உத்திரமேரூரை அடுத்த நடராஜபுரம் அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் திடீரென பஸ் மீது கல்வீசினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி நொறுங்கியது.

அதிர்ச்சி அடைந்த டிரைவர் உடனடியாக பஸ்சை நிறுத்தினார். உடனே மர்ம நபர்கள் இருவரும் பஸ்சின் கண்ணாடிகள் மீது மேலும் கல்வீசி நொறுக்கி தப்பி சென்றுவிட்டனர்.

இதில் டிரைவர் நேதாஜி பலத்த காயம் அடைந்தார். பயந்து போன பயணிகள் அலறியடித்து கீழே இறங்கி ஓடினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

படுகாயம் அடைந்த டிரைவர் நேதாஜி செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். பயணிகள் அனைவரும் மாற்று பஸ்சில் அங்கிருந்து சென்றனர்.

உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு நோக்கி அரசு பஸ் சென்றது. குமாரவாடி அருகே வந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் பஸ் மீது கல்வீசி தப்பினர்.

இதில் பஸ்சின் கண்ணாடி நொறுங்கியது. இந்த 2 கல்வீச்சு சம்பவத்திலும் பயணிகள் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

கல்வீச்சில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் ஆவேசத்துடன் தெரிவித்தனர். இது குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Similar News