செய்திகள்

புதுக்கோட்டையை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2018-01-06 22:38 IST   |   Update On 2018-01-06 22:38:00 IST
தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
புதுக்கோட்டை:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர்களின் மாவட்டக்குழு கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமையன் தலைமை தாங்கினார். மாநிலக்குழு முடிவுகளை விளக்கி விவசாய தொழிலாளர் சங்க மாநில செயலாளர் சங்கர், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பொன்னுச்சாமி ஆகியோர் பேசினார்கள். 

கூட்டத்தில் கடந்த ஆண்டைப்போல நடப்பாண்டிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்து விட்டது. இதனால் மாவட்டம் முழுவதும் கடும் வறட்சி நிலவுகிறது. சாகுபடி செய்து உள்ள விவசாய பயிர்கள் முற்றிலும் நாசமாகி வருகிறது. இதனால், விவசாயிகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். விவசாயத் தொழிலாளர்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். 

எனவே, தமிழக அரசு புதுக்கோட்டை மாவட்டத்தை உடனடியாக வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து நிவாரணம் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மத்தியில் உள்ள மோடி அரசு 100 நாள் வேலை திட்டத்தை முற்றிலுமாக முடக்கும் வேலையில் இறங்கி உள்ளது. மோடி அரசின் இத்தகைய நடவடிக்கையை கண்டிப்பதோடு, விவசாய தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு 100 நாள் வேலை திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டும். 

சட்டப்படியான கூலியை உயர்த்தி, வேலை நாட்களையும் அதிகப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

மேலும் இதே கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற 30-ந் தேதி அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் மனு கொடுத்து மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் நடத்துவது, மேலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் திரளான விவசாய தொழிலாளர்களை கலந்து கொள்ள செய்வது எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  #tamilnews

Similar News