செய்திகள்
அறந்தாங்கி அருகே கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை
இரவு நேரத்தில் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறந்தாங்கி:
அறந்தாங்கியை அடுத்த ஆணைகட்டிக்கொல்லையில் மகேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உண்டியல் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டிருந்தது. கடந்த வைகாசி விசாகத் திருவிழாவின் போது உண்டியல் திறக்கப்பட்டு பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் எண்ணி கோவில் கணக்கில் சேர்க்கப்பட்டு, உண்டியல் மீண்டும் பூட்டப்பட்டது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவிலின் பூசாரி தட்சிணாமூர்த்தி என்பவர் கோவிலை பூட்டியுள்ளார். கோவிலின் அருகே குடியிருக்கும் அவர், இரவு 10.30 மணியளவில் மீண்டும் ஒருமுறை கோவிலை சுற்றி பார்த்து விட்டு வீட்டிற்கு சென்று தூங்கினார்.
அவர் நேற்று அதிகாலை 5 மணிக்கு எழுந்து கோவிலில் போடப்பட்டிருந்த விளக்குகளை அணைப்பதற்காக சென்றுள்ளார். அப்போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்ட நிலையில் கிடந்துள்ளது. மேலும் உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய பணம் கொள்ளை போய் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நாகுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் அருள் பெருமாள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார். அப்போது உண்டியலில் இருந்து சுமார் ரூ.30 ஆயிரம் கொள்ளை போய் இருக்கலாம் என கிராம மக்கள் தெரிவித்தனர். கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews