செய்திகள்

தினகரனை சந்தித்த எம்.பி.க்களின் மீது கட்சி தாவல் தடைச்சட்டமா?: முதல்வர் முக்கிய முடிவு

Published On 2017-12-27 10:24 GMT   |   Update On 2017-12-27 10:24 GMT
ஆர்.கே நகர் தேர்தலில் தினகரன் வெற்றி பெற்றதை அடுத்து, அவரை சந்தித்துள்ள இரண்டு அ.தி.மு.க எம்.பி.க்கள் மீது கட்சி தாவல் தடைச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முதல்வர் பழனிசாமி முடிவெடுத்துள்ளார்.
சென்னை:

ஆர்.கே.நகர் இடைத் தேர்லில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றதையடுத்து அ.தி.மு.க. எம்.பி. வேலூர் செங்குட்டுவன், எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து மீண்டும் தினகரன் அணிக்கு தாவி உள்ளார். அவர் டி.டி.வி. தினகரன் வீட்டுக்கு சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு வந்துள்ளார்.

இவர் 4 தடவை அணிகள் மாறி உள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஆரம்பத்தில் ஓ.பன்னீர் செல்வம் அணியில் இருந்தார். அதன்பிறகு டி.டி.வி. தினகரன் அணிக்கு சென்றார். எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர் செல்வம் அணிக்கு இரட்டை இலை சின்னம் கிடைத்ததும் தினகரன் அணியில் இருந்து பிரிந்து மீண்டும் இங்கு வந்தார்.

இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றதும் மீண்டும் அவரை வீட்டுக்கு சென்று பார்த்து செங்குட்டுவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இவர் 4 முறை அணிகள் மாறி உள்ளதால் இவர் மீது நடவடிக்கை எடுக்க அ.தி.மு.க. மேலிடம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதேபோல் புதுச்சேரி எம்.பி. கோகுலகிருஷ்ணனும் அடையாரில் உள்ள டி.டி.வி. தினகரனை சந்தித்து வாழ்த்து தெரிவித்து விட்டு வந்துள்ளார். இதுகுறித்து கோகுல் கிருஷ்ணனிடம் கேட்டதற்கு ஆர்.கே.நகர் சட்டசபை தேர்தலில் டி.டி.வி. தினகரன் வெற்றி பெற்றதால் வாழ்த்து தெரிவித்தேன் என்றார். டி.டி.வி. தினகரனை நான் சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் ஏதும் இல்லை. இரட்டை இலை சின்னம் இருக்கும் இடத்தில்தான் என் அரசியல் பயணம் இருக்கும் என்றும் தெரிவித்தார்.

தினகரன் அணியில் இருந்த இவர் கடந்த மாதம் தான் எடப்பாடி அணிக்கு தாவினார். மறுபடியும் மீண்டும் தினகரனை சந்தித்து இவர் வாழ்த்து தெரிவித்து வந்துள்ளதால் அ.தி.மு.க. மேலிட நிர்வாகிகள் இவர் மீது கடும் கோபத்தில் உள்ளனர். எனவே இவர் மீது நடவடிக்கை எடுக்க அலோசிக்கப்பட்டு வருகிறது.

கட்சி கட்டுப்பாட்டை மீறி, கட்சி விரோத செயலில் 2 எம்.பி.க்களும் ஈடுபட்டுள்ளதால் இவர்கள் மீது கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் எம்.பி. பதவியை பறிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

இதற்காக பாராளுமன்ற செயலாளரை அ.தி.மு.க. நிர்வாகிகள் சந்தித்து கட்சித்தாவல் தடை சட்டத்தின் கீழ் செங்குட்டுவன், கோகுல கிருஷ்ணன் ஆகிய 2 எம்.பி.க்களின் பதவியை பறிக்க கடிதம் கொடுக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
Tags:    

Similar News