செய்திகள்

திருமாவளவனை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பா.ஜனதா கட்சியினர் மீது வி.சி.கட்சியினர் கல்வீச்சு

Published On 2017-12-11 11:48 GMT   |   Update On 2017-12-11 11:48 GMT
திருமாவளவனை கண்டித்து பா.ஜனதாவினர் கோ‌ஷமிட்டதால் ஆத்திரம் அடைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ஜனதாவினர் மீது கல்வீசி தாக்கினர்.
சீர்காழி:

இந்து கோவிலை பற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்த கருத்தை கண்டித்து நாகை மாவட்டம் சீர்காழியில் இன்று காலை 10.30 மணியளவில் பா.ஜனதா சார்பில் தமிழிசை மூவர் மணி மண்டபம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு நாகை மாவட்ட பா.ஜனதா எஸ்.சி., எஸ்.டி. பிரிவு தலைவர் இளவேந்தன் தலைமை தாங்கினார். இதில் 100-க்கும் மேற்பட்ட பா.ஜனதா கட்சியினர் கலந்து கொண்டனர். அப்போது அங்கு 70-க்கும் மேற்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திரண்டு வந்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் திருமாவளவனை கண்டித்து பா.ஜனதாவினர் கோ‌ஷமிட்டதால் அவர்கள் ஆத்திரம் அடைந்தனர். உடனே விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பா.ஜனதாவினர் மீது கல்வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த கல்வீச்சில் பா.ஜனதாவை சேர்ந்த 6 பேர் காயம் அடைந்தனர். இதனால் பா.ஜனதா கட்சியினரும் பதிலுக்கு விடுதலை சிறுத்தை கட்சியினர் மீது கல்வீசினர்.

பா.ஜனதாவினரும், விடுதலை சிறுத்தை கட்சியினரும் மோதி கொண்டதால் அந்த இடமே போர்க்களம் போல் காணப்பட்டது.

இதையடுத்து அங்கு போலீஸ் டி.எஸ்.பி. சேகர், இன்ஸ்பெக்டர்கள் சிங்காரவேல், செல்வம் மற்றும் 50-க்கும் மேற்பட்ட போலீசார் வந்தனர். அப்போது பா.ஜனதா, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி நடத்தினர். இதனால் இருதரப்பினரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கல்வீசி தாக்கிய சம்பவத்தை கண்டித்து பா.ஜனதாவினர் சீர்காழி பஸ் நிலையம் அருகில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் சுமார் 300-க்கும் மேற்பட்ட பா.ஜனதாவினர் கலந்து கொண்டனர்.

இதற்கிடையே கல்வீச்சு சம்பவத்தில் காயம் அடைந்த பா.ஜனதா கட்சியை சேர்ந்த 6 பேர் சீர்காழி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பா.ஜனதாவினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மோதி கொண்ட சம்பவம் சீர்காழி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News