108 ஆம்புலன்ஸ் தாமதத்தால் மாணவி பலி
காஞ்சீபுரம்:
காஞ்சீபுரத்தை அடுத்த நசரத்பேட்டையை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மகள் சரிகா (வயது 16). அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
சரிகாவுக்கு ஒரு வருடத்துக்கு முன்பு 2 சிறுநீரகமும் செயல் இழந்தது. உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர் சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டயாலிசிஸ் சிகிச்சைக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சரிகா அனுமதிக்கப்பட்டார். நேற்று மதியம் திடீரென அவருக்கு உடல்நிலை மோசம் அடைந்தது.
உடனடியாக சரிகாவை சென்னை ராஜீவ் காந்தி அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்படி டாக்டர்கள் பரிந்துரை செய்தனர்.
உடனடியாக ‘108’ ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தும் நீண்ட நேரம் வரை ஆம்புலன்ஸ் வேன் வரவில்லை. இதனால் தவித்த சரிகாவின் பெற்றோர் காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் பொன்னையாவிடம் புகார் தெரிவித்தனர்.
கலெக்டரின் நடவடிக்கையை அடுத்து சுமார் 7 மணி நேர காத்திருப்புக்கு பின்னர் ஆம்புலன்ஸ் வேன் சரிகாவை அழைத்து செல்ல வந்தது. ஆனால் சென்னைக்கு செல்லும் வழியிலேயே மாணவி சரிகா பரிதாபமாக இறந்தார்.
இது அவரது பெற்றோரையும், உறவினர்களையும் அதிர்ச்சி அடையச் செய்து உள்ளது. சரியான நேரத்துக்கு ஆம்புலன்சு வராததே மகள் உயிரிழப்புக்கு காரணம் என்று அவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். மாணவி சரிகாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டு உள்ளது.
மாணவி சரிகாவின் தந்தை ஆனந்தன் நெசவு தொழில் செய்து வருகிறார். அவரது மனைவியும் நெசவு தொழிலுக்கு ஆதரவாக உள்ளார். இவர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பம்.
இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளன. 3-வது மகள்தான் சரிகா. சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட அவரை காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அப்போது மேல் சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ் வரதாமதத்தால் அவர் பலியாகி விட்டார்.
இந்த நிலையில் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் ஆம்புலன்சு வர தாமதம் ஏன்? என்பது குறித்து மருத்துவ மற்றும் ஊரக பணிகள் இயக்குனர் இன்பசேகரன் இன்று ஆய்வு செய்தார்.
அப்போது மாணவி சரிகாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள் மாணவியின் அப்போதைய உடல் நிலை, ஆம்புலன்சுக்கு எப்போது தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறித்து கேட்டறிந்தார்.
விசாரணைக்கு பின்னர் சரியான நேரத்திற்கு வராத 108 ஆம்புலன்சு மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.